உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற யு.ஜி.சி.,க்கு கோரிக்கை

இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற யு.ஜி.சி.,க்கு கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இளநிலை, முதுநிலை மாணவர் சேர்க்கை குறித்த புதிய விதிகளை மாற்ற வேண்டும் என, தமிழ்நாடு சுயநிதி, கலை மற்றும் அறிவியல், மேலாண்மை கல்லுாரிகளுக்கான சங்கம், பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,க்கு கோரிக்கை விடுத்துள்ளது.யு.ஜி.சி., சமீபத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கான குறைந்தபட்ச தரநிலை அறிவுறுத்தலை வெளியிட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களை, நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் உள்ளதாகவும், விதிமுறைகளை மாற்ற வேண்டும் எனவும், சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் செயலர் சேதுபதி கூறியுள்ளதாவது:யு.ஜி.சி., வடிவமைத்துள்ள விதிமுறைகளை, நடைமுறைப்படுத்துவது சவாலானது. விதிகளை சரிபார்த்து மறுசீரமைக்க வேண்டும். பல்கலைகள், கல்லுாரிகளை உள்ளடக்கியவையே உயர்கல்வி நிறுவனங்கள். ஆனால், விதிமுறைகள் இரண்டும் ஒரே மாதிரி உள்ளன. ஏற்கனவே பல பல்கலைகள், கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை சரிவால், மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, நிர்வாகத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்துவதுடன், ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை இழப்புக்கும் வழி வகுக்கும். ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற அறிவிப்பு இரண்டு, மூன்றாம் நிலை நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது, பன்னாட்டு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே உதவும். இந்திய கல்வி நிறுவனங்கள் பாதிப்படையும். இதை திரும்ப பெற வேண்டும். முதுநிலை பாடத்திட்டங்களுக்கான மாற்றங்கள், மாணவர் சேர்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும். உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை, நியமிப்பதற்கான யு.ஜி.சி., விதிகள் திருத்தப்பட வேண்டும். இளநிலை மாணவர்களுக்கான, உதவிப் பேராசிரியர் பதவிக்கு குறைந்தபட்ச தகுதியாக முதுநிலை பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி என்பதை, ஏற்படுத்த வேண்டும். பேராசிரியர் பதவிக்கு, 'நெட்' மற்றும் 'ஸ்லெட்' தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். - - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஆரூர் ரங்
டிச 26, 2024 08:08

எல்லோரையும் வேலைக்கு உதவா பட்டதாரிகளாக ஆக்கி அலைய விடுவதா கல்வித்துறையின் நோக்கம்? தகுதித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு மேற்படிப்பு இடங்களை கொடுப்பது ஆசிரியர்களுக்கும் நிறுவனத்துக்கும் தலைவலியை கொடுக்கும். வரிப்பணம் வீணாகும். பள்ளியைத் தாண்டாத பலர் பெரும்பாலான பட்டதாரிகளை விட அதிகம் சம்பாதிக்கின்றனர் என்பதே நிதர்சனம்.


சமீபத்திய செய்தி