உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 5வது வேளாண் பட்ஜெட்டில் ரூ.45,661 கோடி ஒதுக்கீடு

5வது வேளாண் பட்ஜெட்டில் ரூ.45,661 கோடி ஒதுக்கீடு

சென்னை: தி.மு.க., அரசின் ஐந்தாவது வேளாண் பட்ஜெட், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து விவசாயிகளையும் கவரும் வகையில், பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஐந்தாவது ஆண்டாக நேற்று, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. காலை 9:30 மணிக்கு தன் உரையை துவங்கிய அமைச்சர், பகல் 11:11 மணிக்கு நிறைவு செய்தார். தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த அவருக்கு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர். பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு, 45,661 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு விவசாயிகளையும் கவரும் வகையில், இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.அவர் பேசியதாவது:வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் விவசாயிகள். அதனால் தான் விவசாயிகளின் நலனை பேணி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உயர்ந்த நோக்கத்துடன், வேளாண்மை துறையில் பல சீரிய முயற்சிகளை, அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஏழு விதமான வேளாண் காலநிலை மண்டலங்களுக்கும், அங்கு சாகுபடி செய்யும் பயிர்களுக்கும் ஏற்றவாறு, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் வளம் பெறவும், தமிழக மக்கள் நலம் பெறவும் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'சொல்வதை செய்வோம்; சொல்லாததையும் செய்வோம்' என, விவசாயிகளின் வாழ்க்கையை தொடர்ந்து வளப்படுத்தும் வகையில், ஐந்தாவது வேளாண் பட்ஜெட் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், செவ்வனே திட்டங்களை செயல்படுத்தியது போலவே, வரும் நிதியாண்டிலும் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ