உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கடல்சார் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.69,725 கோடி வழங்கப்படும்

கடல்சார் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.69,725 கோடி வழங்கப்படும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நம் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் கப்பல் கட்டுமான திட்டம் உட்பட கடல்சார் உட்கட்டமைப்பு பணிக்காக 69,725 கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நம் நாட்டின் கடல்சார் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 69,725 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக உள்நாட்டிலேயே கப்பல் கட்டுமான திட்டத்தை மேம்படுத்த முடியும். இதுதவிர நீண்டகால நிதி ஆதாரத்தை உருவாக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்ப ரீதியிலான கப்பல் கட்டுமான தளங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கப்பல் கட்டுமான நிதியுதவி திட்டத்தை வரும் 2036ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை கண்காணித்து, செயல்படுத்தும் வகையில் தேசிய கப்பல் கட்டுமான இயக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் வாயிலாக 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் இந்திய கடல்சார் துறைக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்

ஆண்டுதோறும் துர்கா பூஜை, தசரா விடுமுறை நாட்களுக்கு முன்னதாக தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்படும். இதேபோல், இந்த ஆண்டும், ரயில்வே ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை, போனஸ் தொகையாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வாயிலாக 10.91 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் எனவும், இதற்காக, 1,865.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, அதிகபட்சமாக 17,951 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !