உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  ஆர்.எஸ்.எஸ்., அதிரடி முடிவு; உதறலில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள்

 ஆர்.எஸ்.எஸ்., அதிரடி முடிவு; உதறலில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தலில் தொடர் தோல்வி அடைந்தும், மீண்டும் போட்டியிட துடிக்கும் பா.ஜ., நிர்வாகிகளுக்கு வேட்டு வைக்கும் முடிவை, ஆர்.எஸ்.எஸ்., மேலிடம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, பா.ஜ., டில்லி வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், வேட்பாளராக குறிப்பிட்ட சிலருக்கு தான், மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கு பெரும் செலவை, டில்லி மேலிடம் செய்கிறது. தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும், பா.ஜ., வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கும் பொருளாதாரமும் பல மடங்கு உயர்கிறது. கட்சியை வளர்ப்பதை விட, அவர்கள் தங்களை வளர்ப்பதிலேயே அதீத கவனம் செலுத்துகின்றனர். அனைத்திற்கும் மேலாக, குறிப்பிட்ட சிலரே கட்சியின் முகமாக மாறுவது, சித்தாந்த வளர்ச்சிக்கு நல்லதல்ல. அதேபோல், பிரபலமானவர்கள் என்ற மாயையால், அடுத்தகட்ட நிர்வாகிகளுக்கு, கடைசி வரை வாய்ப்பு கிடைப்பது இல்லை. இப்போது, வாரிசு அரசியலும் தமிழக பா.ஜ.,வுக்குள் தலை துாக்கியுள்ளது. எனவே, தமிழக பா.ஜ.,வில் நடக்கும் கூத்துகளை, விரிவான அறிக்கையாக ஆர்.எஸ்.எஸ்., மேலிடத்துக்கு, கட்சி நலன் விரும்பிகள் அளித்துள்ளனர். இதனால், வரும் தேர்தலிலேயே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக, இம்மாதம் மூன்றாம் வாரம், ஆர்.எஸ்.எஸ்., முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில், தமிழக பா.ஜ., வேட்பாளர்கள் குறித்து, அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் முடிவை, பா.ஜ., மேலிடம் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தகவல், கட்சிக்குள் வேகமாக பரவி வருவதால், பிரபலமானவர்கள் என்ற போர்வைக்குள் வலம் வருவோரும், தேர்தல் கனவில் உள்ள வாரிசுகளும் உதறலில் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை