மதுரை; மதுரையில் நடக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., தேசிய மாநாட்டில், விதிகளைமீறி நுாற்றுக்கணக்கான மாநகராட்சி பணியாளர்கள் துாய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், மூன்று நாட்களாக பிற வார்டுகளில் பணிகள் தேங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமுக்கத்தில் ஏப்., 6 வரை நடக்கும் இம்மாநாட்டிற்காக வளாகத்திலும், சுற்றுப்பகுதிகளிலும் துாய்மைப் பணிகள் மேற்கொள்ள மண்டலம் 1, 2க்கு உட்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், குப்பை அள்ளும் வாகனங்கள், குப்பை சேகரிக்கும் தனியார் நிறுவன மேற்பார்வையாளர்கள் என, ஒட்டுமொத்த பணியாளர்களுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதனால் மதுரையின் பிற பகுதிகளில் வீடுதோறும் வண்டிகளில் சென்று குப்பை சேகரிப்பது போன்ற துாய்மைப் பணிகள் தேங்கியுள்ளன.மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:
மா.கம்யூ.,மாநாடு துவங்குவதற்கு முதல் நாளில் இருந்தே தூய்மைப் பணியாளர்களுக்கு, மாநாடு நடக்கும் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சி சார்பில் நடக்கும் மாநாடு என்பதால் விதிமீறி செயல்படுகின்றனர். குறிப்பாக மண்டலம் 2ல் உள்ள 21 வார்டுகளில் இருந்து, தலா 5 துாய்மைப் பணியாளர், ஒரு குப்பை அள்ளும் வண்டி, ஒரு தனியார் நிறுவன மேற்பார்வையாளர், இவர்களை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர் ஒருவர் என தமுக்கம் மைதானம் பகுதியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியில் உள்ளனர். தவிர, மண்டலம் 3, 4ன் துாய்மை பணியாளர்கள் ரோடுகளை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மண்டலம் 5ன் பணியாளர்களுக்கு, விமான நிலையம் ரோட்டில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி, 200 பேருக்கு விதிகளை மீறி பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பிற வார்டுகளில் துாய்மைப் பணிகள் முழுமையாக நடக்கவில்லை. மாநாடு இன்னும் மூன்று நாட்கள் நடக்க உள்ளது. அதனால், மதுரையின் பிற பகுதிகளில் சுகாதாரப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
துாய்மை பணியில் பாதிப்பில்லை:
மாநாட்டிற்கு கேரள, தமிழக முதல்வர்கள் வருகை காரணமாக, மாநாடு நடக்கும் வெளிப்பகுதியில் துாய்மைப் பணிகள் மேற்கொள்கின்றனர். உள்பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட சில பணியாளர்களுக்கு மட்டுமே பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏனையோர், தங்கள் பகுதியில் துாய்மைப் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், எந்த பகுதியிலும் தூய்மைப் பணி பாதிக்கப்படாது. -சித்ரா, கமிஷனர், மதுரை மாநகராட்சி