அ.தி.மு.க.,வில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளார் என, அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்குமாறு பொதுச்செயலர் பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். அதைத்தொடர்ந்து, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதற்கிடையே, பழனிசாமியின் அதிரடி நடவடிக்கையை எதிர்பாராத செங்கோட்டையன் அதிர்ச்சி அடைந்து, தடுமாறினார். எனினும், சுதாரித்துக் கொண்டு, அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தன் ஆதரவாளர்கள் மற்றும் பழனிசாமியால் கட்சியில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடனும் பேசி, ஆலோசனை கேட்டுள்ளார். அனைவருடனும் பேசிய பின், செங்கோட்டையன் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். விரைவில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்களை சந்தித்து, அ.தி.மு.க.,வில் தற்போது நிகழும் விஷயங்களை விளக்கமாக எடுத்துச்சொல்லி, தனக்கு ஆதரவு தேட முடிவெடுத்துள்ளார். தன் கருத்துக்கு வலு சேர்ந்ததும், பழனிசாமியிடம் இருந்து அ.தி.மு.க.,வை மீட்டெடுப்பது சுலபம் என நினைக்கிறார். அ.தி.மு.க.,வை பழனிசாமியிடம் இருந்து மீட்கும் சூழலில், சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்து ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வை உருவாக்கலாம் என்பது அவரது எண்ணம். இதற்கு, அம்மூவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல். இதுகுறித்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியதாவது: செங்கோட்டையனுக்கு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது. இருந்தாலும் கோர்ட், வம்பு, வழக்கு, அடிதடி என்றால், பிரச்னையான இடத்துக்கு செல்லவே மாட்டார். எதிலும், பட்டும் படாமலும் நடந்து கொள்ளும் அவருக்கு, கட்சியில் பழனிசாமியின் தன்னிச்சையான போக்கு பிடிக்கவில்லை. கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் முடிவுகளை வைத்துத்தான், கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என, மூத்த தலைவர்கள் ஆறு பேருடன் இணைந்து பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், அப்போது பழனிசாமி நடந்துகொண்ட விதம், செங்கோட்டையனை எரிச்சல் அடைய வைத்தது. இதனால் நொந்து போன செங்கோட்டையன், அவ்வப்போது கட்சி இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தினார். இதற்கு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஆதரவு இருந்தது. ஆனாலும், பொறுமையாக செயல்பட்டார். தற்போது, சட்டசபை தேர்தல் நெருங்குவதால், கட்சியை உடனடியாக ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி, கட்சியை ஒருங்கிணைக்க பழனிசாமிக்கு கெடு விதித்தார். ஆனால், அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார் பழனிசாமி. இதனால், இவ்விஷயத்தை அமைதியாக எதிர்கொள்வது சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்திருக்கும் செங்கோட்டையன், தன் கருத்துக்கு, ஒட்டுமொத்த அ.தி.மு.க.,விலும் ஆதரவு தேட முடிவெடுத்துள்ளார். இதற்காக, தமிழகம் முழுதுக்குமான தன் சுற்றுப்பயணத்தை விரைவில் அறிவிக்க உள்ளார். ஏற்கனவே, இதுபோன்ற சுற்றுப்பயணத்தை, புது 'கெட் - அப்'பில் மேற்கொள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலா திட்டமிட்டிருந்தார். இதற்காக, வெளிநாட்டில் இருந்து, 'விக்' வரவழைத்திருந்தார். தற்போது, செங்கோட்டையன் பயணம் மேற்கொள்ளவிருப்பதால், சசிகலா, தன் சுற்றுப்பயணத் திட்டத்தை கைவிட்டுள்ளார். பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை விரைவில் நேரில் சந்திக்கவும் செங்கோட்டையன் திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர் - நமது நிருபர் -.