உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மீண்டும் செந்தில்பாலாஜி அமைச்சரானால் கோர்ட்டை நாட உத்தரவு

மீண்டும் செந்தில்பாலாஜி அமைச்சரானால் கோர்ட்டை நாட உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்களை முடித்து வைத்தது. அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமான நபர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தன.

ராஜினாமா

இதுகுறித்து வழக்கு பதிந்த அமலாக்கத் துறையினர், 2023 ஜூனில் அவரை கைது செய்தனர். பின், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, அமைச்சராக பதவியேற்றார்.இதற்கு எதிராக வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.ஏற்கனவே, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறாரா, இல்லையா என்பதை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.'அமைச்சராக தொடரக்கூடாது என, எந்த நிபந்தனையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை. அதே நேரத்தில், சாட்சிகளை கலைக்க எந்த முயற்சி களும் மேற்கொள்ளவில்லை' என, செந்தில் பாலாஜி தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி, நாங்கள் தவறு செய்து விட்டோம். 'அவர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அமைச்சராக இருந்தால், சாட்சிகள் எவ்வாறு தைரியமாக சாட்சி சொல்வர்' என, காட்டமாகக் கூறிய நீதிபதிகள், 'அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமின் வேண்டுமா. ஏப்., 28க்குள் பதில் கூறுங்கள்' என உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.இதற்கிடையே, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில் நேற்று, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், “செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

முடித்து வைப்பு

''ஆனால், வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் அமைச்சராக பொறுப்பேற்கக் கூடாது என்ற நிபந்தனையை விதிக்க வேண்டும். அடுத்த ஒரே மாதத்தில் அவர் மீண்டும் அமைச்சராக்கப்படலாம்,” என்றார்.'எதற்காக ஒரு மாதம் என கூறுகிறீர்கள்?' என, துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், “செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதுகூட இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்தார். அதனால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்க வேண்டும்,” என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிடுகையில், 'அமைச்சர் பதவியில் இல்லாமலும், இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 'எனவே, வழக்கு விசாரணை நடைபெறும் பகுதிகளுக்கு செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம்' என்றார். இந்த கோரிக்கைகளை நிராகரித்த நீதிபதிகள், 'செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டதால், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரிப்பதற்கு எதுவும் இல்லை' எனக்கூறி, செந்தில் பாலாஜி ராஜினாமாவை பதிவு செய்து, அவரது ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்களை முடித்து வைத்தனர். மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானால், அப்போது நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S Sivakumar
ஏப் 29, 2025 10:09

பதவி, பணபலம் முன் நீதி தேவதை பயங்கொண்டு உள்ளது போல் தெரிகிறதே?


ஆரூர் ரங்
ஏப் 29, 2025 09:39

எம்எல்ஏ வாக கூட ஆகாமல் விடியலின் மருமகன் ஆட்டிப்படைக்க வில்லையா? போக்குவரத்து ஊழல் வழக்கில் மொத்தம் 2200 பேர் லஞ்சம் கொடுத்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள். இன்னும் 500 சாட்சிகள். எனவே மாநில போலீஸ் போட்டுள்ள வழக்கு இன்னும் 100 ஆண்டுகளுக்குள் முடியும் வாய்ப்பேயில்லை. தனித்தனியான வழக்காக பதியாமல் ஒரே வழக்காக ஆக்கி சாவுமணி அடித்து விட்டார்கள். மேற்கு வங்கத்தில் இதே போன்ற ஆசிரியர் நியமன ஊழலில் 25000 பேரை டிஸ்மிஸ் செய்ய வைத்த கோர்ட் இதிலும் அதே அதிரடி ஆக்ஷன் நடத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை