உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / எரியும் கொள்ளியால் தலையை சொறியலாமா!

எரியும் கொள்ளியால் தலையை சொறியலாமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நம் அண்டை நாடான மியான்மரில், 2021ல் ஜனநாயக ஆட்சி கவிழ்ந்து, ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த உள்நாட்டு போரால், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான மிஜோரமும் பாதிக்கப்பட்டுள்ளது.இங்கு ஆட்சியில் உள்ள, ஜோரம் தேசியவாத கட்சித் தலைவரான முதல்வர் லால்துஹோமா, மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி, மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

வெளிநாட்டவர்

அகதிகளாக வந்த, 31,000 பேருக்கு, உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். இதற்கிடையே, உள்நாட்டு போரால், மியான்மர் ராணுவ வீரர்கள், மிஜோரமுக்கு தப்பி வந்தனர். பல முறை அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான லால்துஹோமா, மியான்மரின் இரண்டு போராட்டக் குழுக்கள் இணைவதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட சின்லாந்து கவுன்சில், இடைக்கால சின் தேசிய ஆலோசனை கவுன்சில் ஆகிய குழுவின் நிர்வாகி களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே கடந்த மாதம் சட்டசபையில் பேசிய முதல்வர் லால்துஹோமா, வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயுதப் போராட்டக்காரர்கள் மிஜோரம் வழியாக, மியான்மருக்கு நுழைவதாக கூறினார். இதில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.கடந்த, 2022 முதல் இந்தாண்டு மே மாதம் வரை குடியேற்றத் துறை மற்றும் மிஜோரம் வெளிநாட்டவர் பதிவு அலுவலக புள்ளி விபரங்களின்படி, மிஜோரமுக்குள், 1,340 வெளிநாட்டவர் வந்துள்ளனர். ஆனால், அவர்கள் திரும்பி செல்லவில்லை. இதில் இருந்து இவர்கள், மியான்மருக்கு செல்வதற்காகவே மிஜோரம் வந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு வந்தவர்கள் தொடர்பான தகவல்களை பார்க்கும்போது, அவர்கள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும், மியான்மரை பூர்வீகமாக உடையவர்கள் அல்லது மியான்மரைச் சேர்ந்தவர்கள்.மேலும், இவர்களில் பலர் ஆயுதப் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் சிலர் டாக்டர்கள். மியான்மரில் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ள ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்களான சின் தேசிய ஆர்மி, அராக்கன் ஆர்மி ஆகியவற்றில் இணைந்து பணியாற்ற இவர்கள், மிஜோரம் வழியாக மியான்மர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.மிஜோரமின் சம்பாய் மாவட்டம் ஜோக்லாத்தரில் இருந்து, மியான்மரின் சின் மாகாணம் பாலாம் மாவட்டம்; மிஜோரமின் சியாஹா மாவட்டத்தின் லங்புக்கில் இருந்து மியான்மரின் சின் மாவட்ட எல்லை கிராமமான ரேலி ஆகியவை, இவர்கள் பயன்படுத்தும் வழியாக உள்ளன.

கூச்சல்

இந்தியா - மியான்மர் இடையே, 510 கி.மீ., துார எல்லை உள்ளது. இது, எப்.எம்.ஆர்., எனப்படும் தாராள நடமாட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரு நாட்டைச் சேர்ந்தவர்களும் எவ்வித விசாவும் இல்லாமல், மற்ற நாட்டில் 16 கி.மீ., துாரம் வரை பரஸ்பரம் பயணிக்க முடியும். கடந்தாண்டு டிசம்பரில் இது, 10 கி.மீ., துாரமாக குறைக்கப்பட்டது.இதைப் பயன்படுத்தி ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள், மிஜோரமில் இருந்து மியான்மருக்குள் புகுந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.பயங்கரவாதிகள், நம் நாட்டின் எல்லையைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரிந்தும், அதற்கு முதலில் ஆதரவு கொடுத்த, மிஜோரம் மாநில அரசு, தற்போது நிலைமை கைமீறியுள்ளதால் கூச்சலிடுகிறது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சத்யநாராயணன்
மே 24, 2025 12:29

மாநில சுயாட்சி என்று முதல்வர்கள் கூறுவதெல்லாம் சுயலாபத்திற்காக தானே மக்களுக்காகவா கூறுகிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை