திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:திருச்சி மாவட்டம், விரகாலுார் கிராமத்தை சேர்ந்த ஸ்டெனிஸ்லாஸ் லுார்துசாமி என்னும் ஸ்டேன்சாமி, கத்தோலிக்க அடிப்படைவாத ஜேசூட் பிரிவை சேர்ந்த பாதிரியார். வனவாசிகள், பட்டியல் சமூகத்தினருக்கு சேவை செய்வதாகக் கூறி, ஜார்க்கண்டில் அமைப்பை நிறுவி, வெளிநாட்டு நிதியை பெற்று வந்தார். அதை, சிறையில் இருந்த மாவோயிஸ்ட் கைதிகளை வெளிக்கொண்டு வர பயன்படுத்தினார். கடந்த, 2017ல், மஹாராஷ்டிராவின் புனே அருகில், பீமா கரோகானில் பொதுக்கூட்டம் நடத்தினார். அடுத்த தினமே பெரும் கலவரம் வெடித்து, ஸ்டேன்சாமி உட்பட பலர் கைதாகினர். சிறையில் இருக்கும்போதே கொரோனா தொற்றால் ஸ்டேன்சாமி இறந்தார். கத்தோலிக்க கிறிஸ்துவர்கள், இறந்தவர் உடலை எரியூட்டுவதில்லை. அதிலும், அடிப்படைவாத பிரிவான ஜேசூட் பாதிரியார்களின் உடலை நிச்சயமாக எரிக்க மாட்டர். ஆனால், நகர்ப்புற மாவோயிஸ்ட்கள், அவரது இறப்பை, தங்களின் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் உத்தியாக, ஸ்டேன்சாமி அஸ்தி என்று கூறி, தமிழகமெங்கும் இரங்கல் கூட்டங்களை நடத்தினர். தற்போது, அவரது பூர்வீக கிராமமான விரகாலுாரில், கத்தோலிக்க சர்ச்சில் ஸ்டேன்சாமிக்கு சிலையும், நினைவிடமும் அமைக்கப்பட்டு, ஜூலை 5ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்டேன்சாமி உள்ளிட்டோர், மாவோயிஸ்ட் சிந்தனைகளை விதைத்த சதிகாரர்கள். மேலும், பிரதமர் மோடியை படுகொலை செய்ய திட்டம் தீட்டியதையும், தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. ஏற்கனவே, முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்றவர்களை, தமிழக முதல்வர் கட்டித்தழுவி, விருந்து கொடுத்து உபசரித்த நிலையில், தற்போது பிரதமரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவருக்கு உருவச்சிலையும், நினைவிடமும் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்தது கண்டனத்துக்குரியது.வ.உ.சி., வாஞ்சிநாதன், பாரதியார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற ஏராளமான தேச பக்தர்களை உருவாக்கிய தமிழக மண்ணில், ஸ்டேன்சாமிக்கு நினைவிடம் அமைப்பது, தேசியம் வளர்ந்த இந்த தெய்வீக மண்ணில் மாவோயிச நஞ்சை விதைப்பதாகும். ஸ்டேன்சாமிக்கு நினைவிடம் அமைப்பதை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.