மைசூரு தசராவுக்கு சாயம் பூசும் சித்தராமையா
''த சரா மதசார்பற்ற பண்டிகை, ஒவ்வொருவரும் அந்த பண்டிகையை கொண்டாடலாம். ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பவுத்தர்கள் என அனைவருக்குமான பண்டிகை இது. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கூட தசராவை கொண்டாடி இருக்கின்றனர். எனவே, இது மதசார்பற்ற பண்டிகை,'' என பிரசித்தி பெற்ற மைசூரு தசரா துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. ஹிந்துக்களின் பண்டிகையை ஏன் மதசார்பற்ற பண்டிகை என அவர் கூறினார் தெரியுமா? காரணம் பானு முஷ்டாக். தசரா பண்டிகையை துவக்கி வைக்க வருமாறு, அவரை கர்நாடக அரசு சார்பில் சித்தராமையா அழைத்திருந்தார். அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏன், உச்ச நீதிமன்றத்தின் கதவை கூட சிலர் தட்டினர். ஆனால், பலன் இல்லை. கடைசியாக சிறப்பு விருந்தினராக வந்த பானு முஷ்டாக், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர் துாவி, தசரா பண்டிகை விழாவை துவக்கி வைத்தார். மவுனம் கலைத்தார் ''வழிவழியாக கொண்டாடப்பட்டு வரும் தசரா பண்டிகைக்கு வேண்டுமென்றே மதசார்பற்ற சாயம் பூச காங்கிரஸ் நடத்திய நாடகம் தான் இது,'' என்கிறார் ராஜா சந்திர உர்ஸ். மறைந்த மைசூரு மகாராஜா ஜெயசாம்ராஜ வாடியாரின் மகள் மஹாராஜகுமாரி இந்திராக்ஷி தேவியின் கணவர் தான் இவர். நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே, தசரா பண்டிகையின் ஹிந்துத்துவ நிறத்தை நீர்த்து போக செய்வதற்கு காங்கிரஸ் கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தன் மவுனத்தை கலைத்து இருக்கிறார் ராஜா சந்திர உர்ஸ். 'ஸ்வராஜ்யா' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், மன்னர் குடும்பம் வசமிருந்த கோவில் மற்றும் தசரா விழா கொண்டாட்ட உரிமைகள் எப்படி அரசு வசம் படிப்படியாக கைமாறியது என்பதையும் விளக்கி இருக்கிறார். இது குறித்து ராஜா சந்திர உர்ஸ் கூறியதாவது: அடிப்படையில் தசரா விழா, ஹிந்துக்களின் பண்டிகை. திரேதா யுகத்தில் இருந்தே அதன் பாரம்பரியம் தொன்றுதொட்டு வருகிறது. விஜயநகர பேரரசு காலத்திலும் சரி; வாடியார்களின் ஆட்சியிலும் சரி, தசரா பண்டிகை வெகு உற்சாகமாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. ஹிந்து மதத்தின் இந்த அடிநாதத்தை மறைத்து சித்தராமையா தசராவை மதசார்பற்ற திருவிழாவாக கதை கட்டுவதை எப்படி ஏற்க முடியும். பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் தசராவில் பங்கேற்றாலும், இதனை மதசார்பற்ற பண்டிகை என எப்படி மாற்றி கூற முடியும்? இந்த பண்டிகையின் அடிநாதம், அதன் வேர், அதன் புனிதம் என அனைத்துமே ஹிந்து பாரம்பரியத்தை சேர்ந்தவை. ஹிந்து கடவுள்களை போற்றுபவை. இப்போதெல்லாம், இப்தார் விருந்துகளில் அனைத்து மதத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதனால், அதை மதசார்பற்ற பண்டிகை என கூறி விட முடியுமா? இப்தார் விருந்துக்கு எப்படி அது பொருந்தாதோ, தசரா பண்டிகைக்கும், அந்த 'லாஜிக்' பொருந்தாது. வன்னி மர வழிபாடு தசரா கொண்டாட்டத்தை மக்கள் இதுவரை மேலோட்டமாகவே பார்த்து வருகின்றனர். தசரா திருவிழா என்றதுமே, அதன் பிரமாண்டம், மன்னர், அம்பாரி வைத்த யானைகள், ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வரும் கூட்டம் போன்ற புற விஷயங்கள் தான் மக்களின் நினைவுக்கு வருகின்றன. புற விஷயங்களை கடந்து, ஆழமான ஆன்மிக வேர், இந்த பண்டிகையில் புதைந்து இருக்கிறது. அதையும் மக்கள் கவனிக்க வேண்டும். அது வன்னிமரத்தை நோக்கிய பயணம். சக்தி சொரூபத்தின் மிக வலிமையான அடையாளம் தான் புனிதமான வன்னிமர வழிபாடு. 'ஜம்போ சவாரி' என்ற சொல் பதத்தை எடுத்து ஆராய்ந்தால் இதன் மகத்துவம் புரியும். 'ஜம்போ' என்ற வார்த்தை வருவதால், உடனடியாக மக்கள் அதை யானைகளுடன் தொடர்புப்படுத்தி பார்ப்பர். ஆனால், உண்மையான சொல் 'ஜாம்பி சவாரி'. அதாவது, வன்னி மரத்தின் இன்னொரு பெயர் தான் ஜாம்பி. புனிதமான வன்னி மரத்தை வழிபாடு செய்வதற்காக மன்னர் புறப்பட்டு செல்லும் சடங்குக்கு பெயர் தான் 'ஜாம்பி சவாரி'. அது தான் காலப் போக்கில் மருவி, 'ஜம்போ சவாரி' என மாறியது. இதில் யானைகள் என்பது வெறுமனே போக்குவரத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதில் ஒரு யானையின் மேல் தங்க அம்பாரி இருக்கும். அந்த அம்பாரியும் மகாராஜாவின் தனிப்பட்ட அரசவையை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும். அதை தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது. சடங்காக மாறிவிட்டது தசரா பண்டிகை பற்றி ரனதீரா கான்டீரவா காலத்து ஏடுகளை புரட்டி பார்க்க வேண்டும். அதிலும், குறிப்பாக கவிஞர் கோவிந்த வைத்தியா எழுதிய கான்டீரவா நரசராஜா விஜயத்தில் அரசர் ஆரம்பத்தில் குதிரை மீது அமர்ந்தே தசரா ஊர்வலத்தில் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது, குதிரையில் இருந்து யானைக்கு போக்குவரத்து மாறி இருக்கிறது. ஆனால், தசரா பண்டிகைக்கான ஆன்மிக சாரம் மாறவே இல்லை. அப்படியே நிலைத்து நிற்கிறது. தசரா பண்டிகையை முறைப்படி துவக்கி வைக்க வேண்டும் என்ற மரபு 1969க்கு முன் வரை கிடையாது. காங்கிரஸ் கட்சி தான் இப்படியொரு மரபை ஏற்படுத்தியது. அதற்கு முன் வரை, அரசரின் சபை கூட்டப்படும். அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள் அரசவை கூடும். அதை வைத்து தசரா பண்டிகை ஆரம்பமாகி விட்டது என மக்கள் உணர்ந்து கொள்வர். தசராவை ஒட்டியே மகாராஜாவும் அரியணையில் ஏறி அமர்வார். மற்ற நேரங்களில் அரியணை ஏற மாட்டார். ஆனால், காங்கிரஸ் அரசு புதிய சடங்குகளை ஏற்படுத்தியது. அதன்படி காங்கிரஸ் முதல்வர் சாமுண்டி மலை மீது ஏறி, கோவிலில் கொலுவீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்வார். அவருடன் அந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சிறப்பு விருந்தினரும் பங்கேற்பார். அந்த சிறப்பு விருந்தினருக்கு உண்மையிலேயே அம்மன் மீது பக்தி இருக்கிறதா? ஹிந்து மதத்தை மதிப்பவரா? என்றெல்லாம் காங்கிரஸ் அரசு கவலைப்படவில்லை. இதை வெறும் சடங்காக மாற்றி விட்டது. மதசார்பற்ற அரசு எனக் கூறிக் கொள்ளும் காங்கிரஸ், ஏன் மதம்சார்ந்த பண்டிகை, விழாக்களில் அதிகாரம் செலுத்த வேண்டும்? மாறிய பழக்கம் தங்க அம்பாரி மீது மகாராஜா அமர்ந்து வரும் பாரம்பரிய பழக்கத்தை கூட காங்கிரஸ் அரசு மாற்றி விட்டது. தங்க அம்பாரியில் தற்போது சாமுண்டீஸ்வரி அம்மனின் சிலை மட்டுமே வைக்கப்படுகிறது. ராஜாஜியின் நெருக்கமான நண்பரும், மூத்த அரசு நிர்வாகியுமான நவரத்ன ராம ராவ் அம்பாரி ஊர்வலத்தை பற்றி ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். அதில், பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் தசராவை கொண்டாடும் போது கூட, மாட்டு வண்டிகளில், மகாராஜாவின் படத்தை வைத்து தான் ஊர்வலம் செல்வர் என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், 1975ல் அந்த பழக்கத்தை மாற்றி விட்டது. மகாராஜா காலத்தில் கூட, தசரா பண்டிகையை மதசார்பற்ற விழாவாக மாற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், மக்களின் ஆவேசத்தால் அந்த முயற்சி பலிக்கவில்லை. கடந்த, 1930களில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மைசூரு மகாராஜா அரண்மனையில் திவானாக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தவர் சர் மிர்சா இஸ்மாயில். தசரா விழாவில் இவரை கவுரவப்படுத்த நினைத்த மகாராஜா கிருஷ்ணராஜா வாடியார், மக்களின் எதிர்ப்பை மீறி, ஊர்வலத்தி ல் பங்கெடுக்க வைத்தார். கோவிலுக்கு சென்றுவிட்டு ஊர்வலம் திரும்பும்போது யானை மீது திவான் கம்பீரமாக அமர்ந்திருப்பதை பார்த்த மக்கள், ஆவேசம் கொண்டனர். திவானை சுமந்து வந்த யானை மீது தாக்குதல் நடத்தினர். இதனால், கூட்டத்தில் குழப்பம் ஏற்பட, மகாராஜா, அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். அதே போல், 1975ல், தசரா பண்டிகையை முதல்வர் குண்டு ராவ் துவக்கி வைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரது உறவினர் உயிரிழந்ததால், அவரால் அந்நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனது. இதனால், அவருக்கு பதிலாக முஸ்லிமான கவர்னர் குர்ஷத் ஆலம் கானுக்கு அந்த வாய்ப்பு சென்றது. அந்த சமயம், மைசூரு போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர், சரியான நேரத்திற்கு மைசூரு அரண்மனைக்கு கவர்னர் செல்ல முடியாதபடி பார்த்துக் கொண்டார். இதனால், விழா அவர் செல்வதற்கு முன்பாகவே துவங்கியது. இதையறிந்த அரசு, போலீஸ் கமிஷனர் பாஸ்கரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ததுடன், பணியிட மாற்றமும் செய்தது. மதசார்பின்மை சாயம் இவை எல்லாம் கடந்த கால வரலாறுகள். 1980களில் இருந்தே, மதசார்பின்மை சாயம் பூசுவதற்கான முயற்சிகள் தொன்று தொட்டு நடந்து வருகின்றன. இப்போது கேள்வி என்னவெனில், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட இந்த மதசார்பின்மையை கர்நாடக ஹிந்து பக்தர்கள் ஏற்கப் போகிறார்களா? அல்லது தசராவின் பாரம்பரிய ஆன்மிக குணத்தை மீட்டெடுக்கப் போகிறார்களா? இவ்வாறு ராஜா சந்திர உர்ஸ் கூறினார். இந்த ஆண்டு தசரா விழாவை துவக்கி வைக்க வந்த, 'புக்கர்' பரிசு பெற்ற எழுத்தாளர் பானு முஷ்டாக்கும், ''அமைதியான தோட்டத்தில் ஒவ்வொரு பூவும், அதன் சொந்த நிறத்தில் பூக்கட்டும், ஒவ்வொரு பறவையும் தன் சொந்த ராகத்தில் பாடட்டும்,'' என போகிற போக்கில் பேசிவிட்டு சென்றிருக்கிறார். இது யாருக்காக சொன்னார் என்பது சாமுண்டீஸ்வரிக்கே வெளிச்சம்.