கோவை: வரும், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கும், 10 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்குமான 'மூவ்'களில் ஒன்றாக, தமிழக முதல்வர் ஸ்டாலினின் கோவை கள பயணம் அமைந்திருந்தது.வரும், 2026 சட்டசபை தேர்தல் களம் எப்படியிருக்கும் என யூகிக்க முடியாத சூழல் காணப்படுகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் தொடர்ந்து நீடிக்குமா, அணி தாவுமா என்கிற சந்தேகப் பார்வை எழுந்துள்ளது. அதனால், இப்போதிருந்தே தி.மு.க., தேர்தலுக்கு தயாராக ஆரம்பித்து விட்டது. ஏனெனில், 2021 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆயத்தப் பணிகள்
அதனால், கோவை மக்களிடம் நம்பிக்கை பெற வேண்டும் என்பதற்காக, கூடுதல் கவனம் செலுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி ஆய்வுக்கு வந்து செல்கிறார்; திட்டங்களை அறிவிக்கிறார்; பணிகளை துவக்கி வைக்கிறார். வரும், 2026 தேர்தலில், தி.மு.க., அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, 10 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதே துவக்கி விட்டார்.ஏனெனில், உள்ளாட்சி தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் தி.மு.க., வெற்றி பெற்றிருந்தாலும், 2026 சட்டசபை தேர்தல் களம் எப்படி இருக்குமென இப்போதே கணிக்க முடியாது. கடந்த லோக்சபா தேர்தலில், 28 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க., வெற்றி பெற்றிருந்தாலும், 619 பூத்களில் பின்தங்கியது; இந்த பூத்களில் தி.மு.க.,வுக்கு இரண்டாமிடமே கிடைத்தது; 16 பூத்களில் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது.அதனால், கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். அதன் காரணமாகவே, பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜியை மீண்டும் நியமித்து, 10 தொகுதிகளையும் ஜெயித்தாக வேண்டு மென்கிற கட்டளையை பிறப்பித்திருக்கிறார்.அதேநேரம் வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுவதற்காக, அரசு முறை பயணமாக கோவை வந்த முதல்வர், துறை ரீதியாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்தார். அமைச்சர்கள் நேரு, வேலு மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரிடம், அவரவர் துறைகளில் மேற்கொண்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை என்ன என்று கேட்டறிந்தார். அவர்களும் களத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் அறிக்கையை சமர்ப்பித்தனர். சட்டசபை தேர்தல்
நேற்று நடந்த நுாலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில், கோவைக்கு தி.மு.க., அரசு என்னென்ன செய்திருக்கிறது என்பதை பட்டியலிட்டார். பின், கடந்த மூன்றாண்டு கால தனது ஆட்சியில் எத்தனை திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன என்பதை குறிப்பிட்டதோடு, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். இதெல்லாம், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக திட்டமிட்டு அறிவிக்கப்பட்டவையாகவே பார்க்கப்படுகிறது.இதை உறுதிப்படுத்தும் வகையில், கோவை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடனான ஆய்வு கூட்டத்திலும், அரசின் சாதனைகளை மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும். இம்மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கேற்ப தேர்தல் பணியாற்ற வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தினார். அதனால், கோவைக்கு முதல்வர் இரு நாள் பயணமாக வந்து சென்றது, திட்டங்கள் அறிவித்தது, 2026 தேர்தலை எதிர்கொள்வதற்கான 'மூவ்'களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் செய்ததென்ன...
கோவையில் நேற்று நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''கோவைக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் செய்த திட்டங்கள் நிறைய இருக்கின்றன. சிலவற்றை மட்டும் ஹைலைட் செய்கிறேன்; அதை நினைவுபடுத்துகிறேன். இந்தியாவிலேயே முதல் வேளாண் பல்கலை கோவையில் அமைத்தோம். கோவை - அவிநாசி ரோட்டில் மேம்பாலம், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டில் பாலம், கோவைக்கு கூட்டு குடிநீர் திட்டம், சிறுவாணி ஆற்றுப்பாலம், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம், கோவை புறவழிச்சாலை, பில்லுார் அணை இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்துார் கூட்டு குடிநீர் திட்டம், கோவை டைடல் பார்க் என சொல்லிக் கொண்டே செல்லலாம்,'' என்றார்.