விஜய் மல்லையாவிற்காக சிறப்பு ஜெயில்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் இந்தியாவிலிருந்து தப்பித்து சென்று வெளிநாட்டில் உள்ளனர். இவர்களை நாடு கடத்தி இந்தியாவிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட நாடுகளில் இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்து, நீதிமன்றங்களில் விசாரணை நடந்து வருகிறது.'இந்திய சிறைச்சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன; வெளிநாட்டில் இருப்பது போல போதிய வசதிகள் இல்லை. நாங்கள் அந்த சிறைகளில் அடைக்கப்பட்டால் வியாதி வரும்; உயிருக்கு பாதுகாப்பு இல்லை' என, இந்த குற்றவாளிகள் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளனர்.இப்படி, 'வெளிநாட்டில் உள்ள இந்திய குற்றவாளிகளுக்காக, ஒவ்வொரு மாநிலமும் சிறப்பு சிறைகளை உருவாக்க வேண்டும். இந்த சிறைகள் சர்வதேச நாடு கடத்தல் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைக்கப்பட வேண்டும்' என, அதிகாரிகளிடம் சொல்லியுள்ளாராம் உள்துறை அமைச்சர் அமித் ஷா.அத்துடன், 'சர்வதேச குற்றவியல் அமைப்பான, 'இன்டர்போல்' வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லும் குற்றவாளிக்கு எதிராக, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் அனுப்பினால், சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட் உடனடியாக ரத்து செய்யும்படியான அமைப்பை உருவாக்க வேண்டும்' எனவும் ஆலோசனை அளித்துள்ளாராம் அமித் ஷா.தற்போது, உலக நாடுகளில் உள்ள இந்திய குற்றவாளிகளை நாடு கடத்த, 388 வழக்குகள் வெளிநாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அமித் ஷாவின் ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், விஜய் மல்லையா போன்ற குற்றவாளிகளை இந்தியாவிற்குள் விரைவில் கொண்டு வரலாம்.