உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  தெரு நாய்கள் தொல்லையும்; தீராத விவாதமும்

 தெரு நாய்கள் தொல்லையும்; தீராத விவாதமும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- வியாஸ் நாகேஸ்வரன் - நாய்க்கடி மரணங்களை தடுக்க, ஒருபுறம் உச்ச நீதிமன்றம் ஆக்கப்பூர்வமான உத்தரவுகளை பிறப்பித்து வரும் சூழலில்; மறுபுறம் அந்த உத்தரவுகளை எதிர்த்து நாய் பிரியர்கள் குரல் கொடுத்து கொண்டே இருக்கின்றனர். முதிர்ச்சியான சமூகம் நன்மை எது? தீமை எது? என்பதை விவேகத்துடன் சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது. அதை விடுத்து, கருணையையும், பச்சாதாபத்தையும் ஒன்றாக நினைத்து குழப்பிக் கொண்டால், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லாமல் போய்விடும். நாடு முழுதும் தெரு நாய்க்கடி சம்பவங்களால் உயிரிழப்புகளும், ரேபிஸ் நோய் தாக்குதல்களும் அதிகரித்த நிலையில், இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் தாமே முன் வந்து விசாரித்து வருகிறது.

கடும் அதிருப்தி

உயிரிழப்புகளை தடுக்க தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசிகள் செலுத்தி பின், பிடித்த இடத்திலேயே அவற்றை கொண்டு விட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது. அதே சமயம், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தெரு நாய்கள் வராமல் தடுக்க வேலி அமைக்கும்படியும் தெரிவித்திருந்தது. அப்படி இருந்தும், தெரு நாய்களுக்கு ஆதரவாக நாய் பிரியர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜரானதால், கடந்த 13ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் கடு ம் அதிருப்தி அடைந்தது. 'நாய்கள் மீது அன்பு இருந்தால், அதை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்த்துக் கொள்ளுங்கள். ஏன் தெருக்களில் அலைய விடுகிறீர்கள்? தெருக்களில் அலைவதால், அவை மக்களை கடித்து பயமுறுத்துகின்றன' என, உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது. உயிரிழப்புகளை தடுக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வரும் சூழலில், நாய் பிரியர்கள் சமூகத்தின் நலனை பற்றி சிந்திக்காமல், அதை கடுமையாக எதிர்த்து வருவது தான், பெரும் விவாதங்களை எழுப்பி இருக்கிறது.

தடுப்பூசி

சமூக பாதுகாப்பு, விலங்குகளின் நலனுக்கு உகந்த வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை, கருணை என்ற பெயரில் நாய் பிரியர்கள் எதிர்ப்பது, எப்படி சரியாக இருக்கும் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். அதைப் பற்றியும் நாய் பிரியர்கள் சற்று நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த 2024ல் மட்டும், தெருநாய்களால் கடிபட்ட நபர்களின் எண்ணிக்கை, சுமார் 37 லட்சம். இது 2023ம் ஆண்டை விட 7 லட்சம் அதிகம். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கும். எனினும், நாய்களின் ஆக்ரோஷமான நடத்தையையோ, ஓயாமல் நாய்கள் குரைப்பதால், அங்கு நிலவும் இரைச்சலையோ எந்தவிதத்திலும் குறைக்க உதவாது. நாய் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தெரு நாய்களை தற்போதைய நிலையில் விட்டு விடுவதும் அவ்வளவு அர்த்தமானதாகவும் தெரிய வில்லை. பசியுடனும், காயத்துடனும் தெரு நாய்கள் வீதிகளில் திரிவதை தான், நாய் பிரியர்கள் விரும்புகிறார்களா? என தெரியவில்லை.

கவலை

பொது இடங்களில் திரியும் தெருநாய்களை அகற்றுவது போன்ற ஒரு அடிப்படை பிரச்னையிலேயே, சமூகத்தில் ஒருமித்த கருத்து எட்டாமல் போனால், ஊழல், காற்று மாசு போன்ற சிக்கலான சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கவலை எழுகிறது. தவிர, ஆக்கப்பூர்வமாக யோசித்து உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை எதிர்ப்பது, நாட்டின் வளர்ச்சியை மங்கலாக்கிவிடும். சமூகத்திற்கு போராடு வதற்கான உரிமை இருக்கிறது. ஆனால், எதற்காக போராடுகிறோம். அதனால் நன்மை கிடைக்குமா என்ற விவேகமும், பொறுப்புணர்வும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Warlord
ஜன 18, 2026 13:00

தெரு நாய்கள் = கார்ப்பரேட் முதலாளிகள்= ரேபிஸ் வேக்சின் = பணம் தெரு நாய்க்கு சப்போர்ட் பண்ற குழுக்கள் எல்லாம் இவங்களால ஏற்படுத்தப்பட்டது தான்


Ramesh Sargam
ஜன 17, 2026 19:50

தெருநாய்கள் தொல்லை ஓரளவுக்கு குறைந்தாலும், அந்த தெருநாய்களுக்கு ஆதரவாக செயல்படும் அந்த குழுவினரால் இப்பொழுது மக்களுக்கு ரொம்ப தொல்லை, தொல்லையோ தொல்லை.


V.Mohan
ஜன 17, 2026 17:21

நாய்கள் ஐயோ பாவம் இல்ல என்ன மாதிரி விலாவாரியாக நாய்களுக்கு வக்காலத்து வாங்குறீங்க தெரு நாய்களை அவ்வப்போது Culling. முறையில் அழிப்பதே நல்லது. சும்மா ஜீவகாருண்யம், மது ஒழிப்பு போன்றவற்றை கூறி ஜல்லியடிக்க வேண்டாம். தினமும் மனிதன் சாப்பிடுவதற்காக லட்சக்கணக்கான ஜீவன்கள் கொல்லப்படுவது பற்றி ஒரு சின்ன இயலாமை வருத்தம் கூட சொல்லாத நாய் பிரியர்கள் ""ரேபீஸ் கடி வியாதியை"" பரிசாக தரும் தெரு நாய்களை கண்டு கொள்ள கூடாது என்று கூறுவது கடைந்தெடுத்த சுயநலம் மற்றும் வியாபார தந்திரம் காட்டு விலங்கினமாக இருக்கும் கட்டுப்படுத்த இயலாத ""தெரு நாய்கள்"" அழித்து ஒழிக்கப்பட வேண்டியவையே. கைவிடப்படும் குழந்தைகளுக்கு இந்த அரசு செய்ய வேண்டியது நிறைய உள்ளது.இந்த தெரு நாய்கள் மனிதனுக்கு ""தேவையற்றது"" இந்தியர்கள் அவற்றை தனிப்பட்ட முறையில் அழிக்க சட்டம் இயற்ற வேண்டும்.


Techzone Coimbatore
ஜன 17, 2026 13:40

இந்த செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கும், செய்தியாளருக்கும் சில கேள்விகள் நீதிமன்றம் ஆக்கபூர்வமான தீர்ப்பு கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள் இதில் அப்படி என்ன ஆக்கபூர்வம் உள்ளது நாய்க்கடியால் ஒரு வருடத்தில் எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன விபத்தால் ஒரு வருடத்தில் எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன. இதை ஒப்பீடு செய்யவும் மதுவால் எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன. மேலும் அதனால் அந்த குடும்ப பொருளாதார பாதிப்புகள். சிகரெட்டால் எவ்ளோ பாதிப்புகள் ஏற்படுகின்றன. டெல்லி காற்று மாசு யாரால் ஏற்படுகின்றது. அதனால் ஒட்டுமொத்த ஊரும் பாதிப்பு அடைகின்றது உணவு கலப்படத்தால் எவ்ளோ பாதிப்புகள், அதை அனுமதிக்கும் அரசாங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கும் தெரியாதா. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் யாரால் ஏற்படுகின்றது. சிறுவயதிலேயே இளைஞர்கள் போதையால் அவர்கள் வாழ்க்கை நாசமாகி வருகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் நாய்கள் மூலமா ஏற்படுகின்றது உங்களை போன்ற சுயநலமிக்க மனிதர்களால் இந்த உலகம் பல்வேறு வகையில் நாசமாகி வருகின்றது நான் கேட்கின்றேன், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பெரிய பிரச்சனை இல்லை. இந்த தெருநாய் தான் மிக பிரச்சனை உங்களை போன்ற ஒழுக்கமான மனிதர்களுக்கு. நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் இந்த உலகம் மனிதனால் தான் மற்ற அனைத்து உயிர்களும் பல்வேறு வகையில் பாதிப்புகள் அடைகிறது. இந்த உலகில் பேராசையுடன் வாழும் ஒரே இனம் என்றால் மனிதன் மட்டுமே நாய் மேல் அன்பு காட்டுவர்களை இந்த சுயநலமிக்க சமுதாயம் குறை கூற என்ன தகுதி உள்ளது. நன்றி இல்லாத மனிதர்களே இந்த உலகை அழிவை நோக்கி கொண்டு செல்வார்கள். இந்த நீதிமன்றம், மருத்துவமனை, காவல்துறை அனைத்தும் ஒழுக்கமற்ற, சுயநலமிக்க மனிதர்களால் தான் இயங்கிக்கொண்டின்றது உங்கள் செய்தித்தாள்களில் பாருங்கள் தினம் எவ்ளோ மரணங்கள், குற்றங்கள் நடக்கிறது. பைரவர் துணை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை