சென்னை : புதிய மின் மோட்டார்களுக்கு மானியம் வழங்க, 11 வகை ஆவணங்கள் கேட்டு வேளாண் துறையினர் கெடுபிடி செய்வதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.பல்வேறு மாவட்டங்களில், மின் மோட்டார்கள் உதவியுடன் நிலத்தடி நீரை பயன்படுத்தி, பாசன தேவையை விவசாயிகள் பூர்த்தி செய்கின்றனர். இழந்து விட்டனர்
விவசாயத்திற்காக, 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக, பல மின் மோட்டார்கள் நீரை இழுக்கும் திறனை இழந்துவிட்டன. அதனால், புதிய மோட்டார்களை பயன்படுத்த வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு, வேளாண் பொறியியல் துறை சார்பில், 15,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.மானியம் பெற விரும்பும் சிறு, குறு விவசாயிகள், விண்ணப்பத்தை நேரடியாக வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் வழங்கலாம்; உழவன் செயலி வாயிலாகவும் பதிவேற்றம் செய்யலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.விண்ணப்பத்துடன் பட்டா, அடங்கல், எப்.எம்.பி., வரைபடம், சிறு, குறு விவசாயிக்கான சான்று, ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், வங்கிக் கணக்கு நகல், மின் இணைப்பு அட்டை நகல், போட்டோ, சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசன பதிவு விபரங்களை இணைக்க வேண்டும். 11 நிபந்தனைகள்
எப்.எம்.பி., வரைபடத்தில், கிணறு அல்லது ஆழ்துளை கிணறு உள்ளது என, கிராம நிர்வாக அலுவலர்கள் சான்று பெற்று இணைக்க வேண்டும் என்று, 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால், மானிய விலையில் மின் மோட்டார்களை பெறுவது, விவசாயிகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:வேளாண் துறையினர் கேட்டுள்ள ஆவணங்களை தயார் செய்வதில், விவசாயிகளுக்கு எந்த சிரமமும் இல்லை. உடனே தருவதில்லை
ஆனால், எப்.எம்.பி., வரைபடத்தில், கிணறு அல்லது ஆழ்துளை கிணறு உள்ளதற்கு சான்று கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. இதை, வி.ஏ.ஓ.,க்கள் உடனடியாக வழங்குவதில்லை. மழை முன்னெச்சரிக்கை பணியில் இருப்பதாகக் கூறி, தட்டிக் கழிக்கின்றனர். இதை எடுத்து கூறினால், வேளாண் துறை அதிகாரிகள் ஏற்பதில்லை. எனவே, அரசு அறிவித்த திட்டத்திற்கான பயனை பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.