ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிய, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை, 5ம் தேதி அவருடைய வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ-., விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம், 24ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனு, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது சரியே. அதற்கு தடை விதிக்க முடியாது' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
நாகேந்திரன் உடல் பரிசோதனை: 'வீடியோ'வில் பதிய உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான, ரவுடி நாகேந்திரன் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின், கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதையடுத்து, தன் கணவரை, 'ஸ்லோ பாய்சன்' எனும் மெல்ல கொல்லும் விஷம் வைத்து, போலீசார் கொன்று விட்டதாக கூறி, அவரது உடலை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில், பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாகேந்திரன் மனைவி விசாலாட்சி, அவசர வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன், வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகினர். அப்போது, 'போலீசார் கஸ்டடியில் இருந்த போது தான், மனுதாரரின் கணவர் இறந்துள்ளார். அவருக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்' என்றனர். இதையடுத்து நீதிபதி, 'மனுதாரரின் உடலை ஓய்வு பெற்ற தடயவியல் மருத்துவ பேராசிரியர் சாந்தகுமார் முன்னிலையில், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். உடலின் உள்ளுறுப்புகளை பத்திரப்படுத்தி, தடய அறிவியல் துறைக்கு அனுப்ப வேண்டும்' என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.டில்லி சிறப்பு நிருபர்-