பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திடாது; பள்ளிக்கல்வித்துறை தகவல்
'மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் ஒரு திட்டமான பி.எம்.ஸ்ரீ திட்டத்தில், தமிழகம் கையெழுத்திடாது' என, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 'தேசிய கல்வி கொள்கை 2020'ன் தொடர்ச்சியாக, 'பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா' எனப்படும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை, மத்திய அரசு கடந்த 2022ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் 14,500 பள்ளிகளை இணைத்து, அவற்றை பிரதமரின் முன்மாதிரி பள்ளிகள் என்ற பெயரில் மேம்படுத்தி, மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டியாக்க வேண்டும் என்பதே மத்திய கல்வி அமைச்சகத்தின் நோக்கம். இதை ஏற்பதாக தமிழக அரசு தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது; பின்னர் பின்வாங்கியது. மேற்கு வங்கம், கேரளா, உள்ளிட்ட அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த வாரம் கேரள அரசு, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டது. அதன் பயனாக, 1,476 கோடி ரூபாய்க்கும் மேல் கேரளாவுக்கு கிடைக்கும். 'காலத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக்கொள்ளா விட்டால், நிதியிழப்பும், வாய்ப்பு இழப்பும் ஏற்படும்' என, கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார். இதேபோல் தமிழகமும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கேரளா மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்கும் மாநிலம். எனவே, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேருவதால், அவர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், தமிழகம் இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது. பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதை தமிழக அரசு ஏற்காது. எனவே, புதிய கல்விக் கொள்கைக்கு முன் அமலான எஸ்.எஸ்.ஏ.,வுக்கான நிதியையும், நீதிமன்றம் வாயிலாக பெறும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதில் வெற்றி பெறும் என தமிழக அரசு நம்புவதால், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். -- நமது நிருபர் -: