உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வரி செலுத்தாத 2 நிறுவனங்களை இழுத்து மூடியது குடிநீர் வாரியம்

வரி செலுத்தாத 2 நிறுவனங்களை இழுத்து மூடியது குடிநீர் வாரியம்

சென்னை: குடிநீர் வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கும் அதிரடி நடவடிக்கையை குடிநீர் வாரியம் துவக்கியுள்ளது. சென்னை அண்ணா சாலையில் நேற்று, இரண்டு நிறுவனங்களுக்கு, சீல் வைக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில், 13.85 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். இதன் வாயிலாக ஆண்டிற்கு, 1,025 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டும். கடந்த 2024 -- 25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், 552 கோடி ரூபாய் வசூலானது. இது, 2023 -- 24 முதல் அரையாண்டைவிட, 20 கோடி ரூபாய் குறைவு.இதனால், நடப்பு நிதியாண்டில் நிர்ணயித்த வரி வருவாயை அதிரடியாக வசூலிக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, வரியை முறையாக செலுத்தாதவர்களுக்கு நோட்டிஸ் வழங்கி, சீல் வைப்பது, ஜப்தி செய்வது போன்ற நடவடிக்கையை துவங்கியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், 111வது வார்டு, அண்ணா சாலையில், 12 ஆண்டுகளாக வரி செலுத்தாமல், ஏழு லட்சம் ரூபாய் நிலுவை வைத்திருந்த, தலைக்கவசம் விற்பனை கடைக்கு நேற்று, சீல் வைக்கப்பட்டது.அதேபோல், 25 ஆண்டுகளாக, 6.22 லட்சம் ரூபாய் வரி நிலுவை வைத்திருந்த, பிரின்ஸ் டவரில் இயங்கி வந்த, 'லிபார்ட் பைனான்ஸ்' நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:வணிகம் மற்றும் அரசு துறை சார்ந்த கட்டடங்களில், வரி நிலுவை அதிகம் உள்ளது. இதில், பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல், குடிநீர் சேவை பெற்று வரும் கட்டடங்கள் குறித்து பட்டியல் தயாரித்துள்ளோம்.இந்த கட்டடங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்குகிறோம். அப்படியும் வரி செலுத்தாத கட்டடங்களுக்கு, சீல் வைத்து வருகிறோம். சீல் வைத்த பிறகும் வரி செலுத்தாமல் இருந்தால், ஜப்தி நடவடிகையில் இறங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Neelakanta Pillai
மார் 07, 2025 05:19

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு துறை நிறுவனங்களே குடிநீர் கட்டணங்களை ஒழுங்காக செலுத்தாத போது மக்களை குறை சொல்வது எப்படி சரியாகும். அரசுத் துறை நிர்வாகங்கள் என்பது அரசு தான் என்பதால் அவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் தவறு இல்லை என்று வாதிட்டால் அரசு என்பது மக்கள் பணத்தில் இயங்குவது தானே அப்படி என்றால் மக்களும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் தவறில்லையே ..... அவனவன் அவனது வேலையை செய்யாமல் சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிப்பதால் அரசு இயந்திரம் ஒழுங்காக செயல்படாமல் அனைத்து முறைகேடுகளும் செவ்வனே அரங்கேறுகிறது.


Petchi Muthu
மார் 06, 2025 13:50

செயல்படாத அலுவலகம் இருந்தாலும் ஒன்றுதான் சீல் வைத்தாலும் ஒன்றுதான்


சமீபத்திய செய்தி