சென்னை:முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், செய்தித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம், 30ம் தேதி அவர் ஜெர்மனி புறப்பட்டு சென்றார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=smhdyif5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொதுவாக முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டால், ஒவ்வொரு நாளும் அவர் எங்கு செல்கிறார், யாரை சந்திக்கிறார் என்ற விபரம், செய்தித்துறை சார்பில், முதல்வர் புறப்படுவதற்கு முன் வெளியிடப்படும். இம்முறை அவ்வாறு எதுவும் வெளியிடப்படவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் அத்துடன், முதல்வருடன் செய்தித்துறை அலுவலர்கள் யாரும் செல்லவில்லை. இதனால், முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்த தகவல் எதுவும் செய்தித்துறை அலுவலர்களுக்கு தெரியவில்லை. 'எந்த விபரம் கேட்டாலும், முதல்வருடன் சென்ற அதிகாரிகள் தகவல் தெரிவித்தால் சொல்கிறோம்' என்றே பதில் அளிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான புகைப்படங்களை, செய்தித்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு அனுப்பினர். அதில், படவிளக்கம் எதுவும் இல்லை. ஜெர்மனி நாட்டில் எந்தெந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்ற விபரத்தை, செய்தித்துறை செய்திக் குறிப்பாக வெளியிட்டது. ஆனால், ஜெர்மனி நாட்டின் எந்த நகரில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்ற விபரம் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்ட போது, 'தெரியவில்லை' என்றே பதில் வந்தது. செய்தித்துறை வெளியிட்ட புகைப்படங்களும் தெளிவாக இல்லை. அதேநேரம், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள், செய்தித்துறை வெளியிடாத புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டனர். இதனால், செய்தித்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம், அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க, செய்தித் துறையில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ள நிலையில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி, அமுதா, ராதாகிருஷ்ணன், தீரஜ்குமார் ஆகியோரை செய்தி தொடர்பாளர்களாக அரசு நியமித்தது. அமுதா இரண்டு முறை, ராதாகிருஷ்ணன் ஒரு முறை பேட்டி அளித்தனர். மற்ற இருவரும் இதுவரை பேட்டி அளிக்கவில்லை. அமுதா வெளிநாடு சென்ற நிலையில், மற்ற மூவரும் தங்கள் துறை பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். முதல்வர் பயணம் உள்ளிட்ட விபரங்களை கேட்க, அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. போன் அழைப்புகளை எடுப்பதையும் தவிர்க்கின்றனர். இடம்பெறவில்லை இதுகுறித்து, செய்தித்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: அரசு செய்திகளை தெரிவிக்க, தனித்துறை இருக்கும் நிலையில் அரசு செய்தி தொடர்பாளர்களாக, நான்கு மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்தனர். தற்போது, முதல்வரின் பயணத்தில், செய்தி தொடர்பு துறை அலுவலர்கள் யாரும் இடம் பெறவில்லை. இதனால், முதல்வர் பயணத்தில் என்ன நடக்குது என்று தெரியாத நிலையில் செய்தித்துறை அலுவலர்கள் உள்ளனர். தற்போதைய நிலையில், செய்தித்துறை அலுவலர்கள், முதல்வர் அலுவலகத்தில் அளிக்கும் செய்திகளை ஊடகங்களுக்கு அனுப்பும் தபால்காரர் பணியை மட்டுமே செய்து வருகின்றனர். அரசு இத்துறையை ஒரு பொருட்டாக கருதவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.