அரசு துறைகளின் அலட்சிய பணிகளால் வேளச்சேரி, சேலையூர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் தேங்கியதாக, குடியிருப்போர் நலச்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, சீதாராம் நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள மழைநீர், சீதாராம் நகர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி வடிகால் மற்றும் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை வடிகால் வழியாக, சதுப்பு நிலத்தை அடைகிறது.ஆனால், இந்த வடிகாலில் ஆங்காங்கே அடைப்பு உள்ளது. மேலும், சதுப்பு நிலத்தில் அடையும் பகுதியை முறையாக கட்டமைக்காததால், சீதாராம் நகர் வெள்ள வடிய கட்டமைப்பு இருந்தும் தீர்வு கிடைக்கவில்லை என, பகுதி மக்கள் புலம்புகின்றனர்.அதேபோல், வேளச்சேரி ஏரி, ஜெகனாதபுரம் பகுதியில் இருந்து வடியும் மழைநீர், விரைவு சாலையில் உள்ள வடிகால் வழியாக, வீராங்கால் கால்வாயில் சேர்ந்து, அங்கிருந்து சதுப்பு நிலத்தை அடைகிறது.நெடுஞ்சாலைத் துறை சார்பில், விரைவு சாலையில் உள்ள பழைய வடிகாலை தகர்த்து விட்டு, புதிய வடிகால் கட்டப்படுகிறது.இப்பணிக்காக, பழைய வடிகாலில் ஆங்காங்கே மண், கற்கள் கொட்டி அடைக்கப்பட்டது. இதனால், ராஜலட்சுமி நகரில் உள்ள மூன்று தெருக்களில் வெள்ளம் தேங்கி பாதிக்கப்பட்டது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் உள்ள வடிகால் துார்வாரப்பட்டது. இருந்தும், வெள்ளம் ஏன் சதுப்பு நிலத்திற்கு செல்லவில்லை என தெரியவில்லை.'வடிகால் முழுவதையும் ஆய்வு செய்ய உள்ளோம். விரைவு சாலை வடிகால் கட்டும் பணிக்காக கொட்டிய மண், கற்கள் அகற்றப்பட்டு, வெள்ளம் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றனர்.சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பிரதான சாலையில், 300 மீட்டர் துாரத்திற்கு, ஆறு கோடி ரூபாய் செலவில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மூடுகால்வாய் கட்டப்பட்டது. ஆனால், கால்வாய்க்கு தண்ணீர் செல்வதற்கான இணைப்பு பாதையை ஏற்படுத்தாமல் விட்டனர்.இதனால், இந்த கனமழையில், வேங்கைவாசல் பிரதான சாலையில், வழக்கத்தைவிட அதிக மழைநீர் தேங்கியது.இதுகுறித்து அப்பகுதியினர், நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் செய்தனர். அதற்கு, 'இனிமேல் தான் பாதையை ஏற்படுத்த வேண்டும்' என, அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர்.இந்நிலையில், மழை பாதிப்பு இடங்களை, அத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டார்.வெள்ள நீரை தங்கு தடையின்றி வெளியேற்றுவதற்கு பல்லாவரம், துரைப்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக செல்லும் சாலையில் உள்ள, 16 சிறுபாலங்கள் துார்வாரும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.தவிர, இரு நாட்களாக மழை கொட்டி தீர்த்ததால், பல சாலைகள் சேதம் அடைந்துள்ளன. ராஜிவ் காந்தி சாலையில் மத்திய கைலாஷ், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் சந்திப்பு, காரப்பாக்கம், துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில், சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.அதை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளையும், அவர் ஆய்வு செய்தார்.
உபரிநீர் வெளியேற கால்வாய் இல்லை
சாலையை சூழ்ந்த ரெட்டேரி நீர்புழல், எம்.ஜி.ஆர்., நகரை ஒட்டியுள்ள ரெட்டேரி பகுதியில் தேங்கும் உபரிநீரை வெளியேற்றுவதற்கு, கால்வாய் இல்லை.கால்வாய் அமைப்பதற்கு, நீர்வளத்துறை வாயிலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.தவிர, இப்பணிக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் நிலையில், நிதித்துறையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவமழையின்போது, ஏரியில் தேங்கும் வெள்ளநீர், மாதவரம் நெடுஞ்சாலையை மூழ்கடிப்பது வழக்கமாக உள்ளது.- நமது நிருபர் குழு -