உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிந்தனைக்களம்: இந்தியா - இலங்கை உறவுக்கான காலம் கனிந்தது

சிந்தனைக்களம்: இந்தியா - இலங்கை உறவுக்கான காலம் கனிந்தது

இலங்கைக்கு மூன்று நாள் பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு கையெழுத்திட்டுள்ள ஏழு ஒப்பந்தங்களில், இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் பொதுவான இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், அவற்றை முடிவுக்குக் கொண்டு வரவும், இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும். எதிர்காலத்தில் இந்தியா, பிற அண்டை நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் இதுவே முன்மாதிரியாக அமையும். கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியா - இலங்கை இடையேயான உறவு, ஏற்ற- இறக்கங்களுடன் காணப்பட்டது. ஒவ்வொரு முறையும் இலங்கையின் பாதுகாப்பை மனதில் வைத்து, இந்தியா எடுத்த முன்முயற்சிகள் எல்லாம் அந்த நாட்டில் ஒரு தரப்பினரால் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது.

ஒப்பந்தம்

இதன் காரணமாக, கடந்த 1987-ல் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனேயின் கோரிக்கை அடிப்படையில் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை, அவரது அரசியல் வாரிசான அதிபர் ரணசிங்கே பிரேமதாசாவால் அவமதித்து திருப்பி அனுப்பப்பட்டது. அந்த காலகட்டத்தில், தற்போது இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அதிபர் அநுராகுமார திசநாயகேவின் ஜே.வி.பி., என்று அறியப்படும் மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை அரசை எதிர்த்து கிளர்ச்சி செய்து போராட்டம் நடத்தியது. அந்த இரண்டு ஆண்டு கால கிளர்ச்சிக்குப் பின், தற்போதைய ஒப்பந்தமே இரு நாடுகளுக்கும் இடையேயான முதல் பாதுகாப்பு ஒப்பந்தமாகும். அதிலும் குறிப்பாக, ஜே.வி.பி.,யின் தலைவரான அதிபர் அநுரா குமார திசநாயகேவே இந்த முன்னெடுப்பை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த, 1960களில் ஜே.வி.பி., நிறுவனரான ரோஹன்ன விஜயவீர, தன் தொண்டர்களின் மனதில் இந்தியாவிற்கு எதிரான மனநிலையை விதைப்பதற்கு தனியாகவே, 'வகுப்புகள்' எடுத்தார். அவர் இறந்துவிட்டாலும், அவரது கட்சியின் மனநிலை தற்போது மாறிவிட்டாலும், அவர் விட்டுச்சென்ற அந்த 'பாடங்களை' தற்போதைய தலைமை இன்னமும் கை கழுவவில்லை. இன்றைய இரு நாட்டு ஒப்பந்தத்திற்கு பின்னர், அதுவும் காணாமல் கூட போகலாம்; இவை அனைத்தையும் விட முக்கியமானது, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு.

குறுக்கீடு

ஒப்பந்தத்தால், இந்தியாவில் சீனாவை குறித்த கவலைகள் காணாமல் போகலாம். அதை போலவே இரு நாடுகளுக்கும் பொதுவான இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த பிராந்தியத்திற்கு சம்பந்தமே இல்லாத சீனா மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் குறுக்கீடு செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும். தற்போதைய பிராந்திய சூழலில், சீனாவை முன்னிறுத்தி இதுபோன்ற ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இந்தியாவே முன் வைத்திருக்கும் என்ற எண்ணம் இரு நாடுகளிலும் நிலவுகிறது. குறிப்பாக, இன்னமும் இந்திய எதிர்ப்பு மனநிலையில் உள்ள இலங்கை தரப்பினர், இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அழுத்தங்களால் மட்டுமே அநுரா அரசு இந்த ஒப்பந்தத்திற்கு தலையசைத்தது என்ற விஷம பிரசாரத்தை கட்டவிழ்த்து விடலாம். இதுவே அவர்களை இலங்கை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள உதவும். காரணம், கொரோனா தடுப்பூசி மற்றும் கடந்த மூன்றாண்டு பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றை சரிகட்ட இந்தியா மட்டுமே இலங்கைக்கு உதவியது என்ற உண்மை, அந்த மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

பாதுகாப்பு

அந்த விதத்தில், இந்திய எதிர்ப்பு மனநிலையை அங்குள்ள எந்த அரசு எடுத்தாலும், அவர்கள் மக்களின் ஆதரவை இழக்கும் சூழல் தோன்றலாம் என்பதே உண்மை. கடந்த, 20 ஆண்டுகளாகவே, இலங்கையின் அடுத்தடுத்த அரசுகளால் இவ்வாறான ஒரு ஒப்பந்தம் குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இலங்கையில் இனப்போர் முடிந்த கையுடன், இதே யோசனை, அரசு சாரா வழிமுறைகளில் டில்லியை சென்றடைந்த வண்ணம் இருந்தன. இடைப்பட்ட காலத்தில் இலங்கை மற்றும் மாலத்தீவு அரசுகள், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வெளியே இருந்து வந்து ஆட்டம் போட நினைக்கும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ராணுவத்தை தங்கள் நாடுகளுக்குள் விட்டுவிடக் கூடாது என்று சேர்ந்து முடிவெடுத்தன. அவர்களை பொறுத்தவரையில், வெளியில் இருந்து தாக்குதல் வந்தால், அவர்களது ராணுவத்தால் அதனை எதிர்கொள்ள முடியாது. தங்களது பாதுகாப்பை இந்தியாவின் பாதுகாப்போடு இணைத்து செயல்பட்டால், அவர்களது பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இந்தியாவின் பயங்களும் சந்தேகங்களும் இல்லாமல் ஆக்கப்படும் என அந்த நாடுகள் நம்பின. இலங்கை இவ்வாறான கோரிக்கையை வைத்த காலகட்டத்தில், இந்திய அமைதிப்படையை இலங்கையின் முன்னாள் அரசு அவமதித்ததை டில்லி தலைமையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுபோன்றே, இனப்போர் காலகட்டத்தில் இந்தியாவுடனான ராணுவம் சார்ந்த ஒப்பந்தத்தை, இலங்கையின் முந்தைய அரசுகள், பிற நாடுகளில் பிரசாரத்திற்காக பயன்படுத்தும் என்ற கவலையும் இந்திய அரசிடம் இருந்தது. தற்போது களநிலைகள் மாறிய சூழலில், இரு நாடுகளுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் அவற்றின் ஒன்றுபட்ட எதிர்கால தோழமைக்கும், முன்னேற்றத்திற்கும் வழிகோலும் என்பதே உண்மை. அந்த விதத்தில், இந்திய-ா - இலங்கை ராணுவம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தத்திற்கு இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தாலும், இப்போது தான் அதற்கான காலம் கனிந்தது என்றே கூற வேண்டும். - என்.சத்தியமூர்த்தி பத்திரிகையாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஏப் 06, 2025 18:24

கையிலே அளிக்கும் ரூ. ரிமோட்டை குடுத்தாலே நல்லுறவு கனிஞ்சிடும் கோவாலு.


pmsamy
ஏப் 06, 2025 10:23

மீனவர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாமல் கேவலமாக இலங்கை சென்று கேவலமான விருதை வாங்கும் ....


ஆரூர் ரங்
ஏப் 06, 2025 12:13

மீன் திருடுவதை அன்னிய மதத் தலைவர்களே ஆதரிப்பதும் அதற்காக அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதும் அநியாயம்.


சமீபத்திய செய்தி