சென்னை: 'ஊட்டி துணை வேந்தர்கள் மாநாடு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. மாநில அரசுடன் அதிகார மோதல் என்பது தவறானது' என, கவர்னர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.அரசு பல்கலைகளின் வேந்தராக கவர்னர் இருக்கிறார். மேலும், துணைவேந்தர் நியமன அதிகாரமும், கவர்னரிடம் தான் இருந்தது. தற்போது, அந்த அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d2r0u8c1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 விமர்சிக்கப்பட்டது
இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டம், சென்னையில் சமீபத்தில் நடந்தது.இந்நிலையில், கவர்னரும், பல்கலை வேந்தருமான ரவி தலைமையில், துணை வேந்தர்கள் மாநாடு, ஊட்டியில் நாளையும், நாளை மறுநாளும் நடக்க உள்ளது. மாநாட்டை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் துவக்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, அரசுக்கும், கவர்னருக்குமான அதிகார மோதலாக விமர்சிக்கப்பட்டது.இதைதொடர்ந்து, தமிழக கவர்னர் மாளிகை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:
மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி நிறுவன தலைவர்களின் மாநாடு, 2022 முதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த மாநாடு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்கும்.தமிழகம் மற்றும் நாடு முழுதும் உள்ள தொழில் துறை நிபுணர்கள் பங்கேற்று, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வர். கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் புதிய சவால்கள், வாய்ப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்கப்படும். மாணவர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்காக, கல்வி நிறுவனங்களை எப்படி போட்டி திறன் வாய்ந்ததாக மாற்றலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். இதுபோன்ற மாநாட்டுக்கு முன், மாநில பல்கலைகள் தன்னிச்சையாக செயல்பட்டு, ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இல்லாமல் இருந்தன. இது, மாணவர்களுக்கு இழப்பாகவும், கல்வி வளர்ச்சிக்கு பாதகமாகவும் இருந்தது.ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுக்கான திட்டமிடல், சில மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கப்படுகிறது. பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்வி, தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, மாநாட்டின் வடிவம், விவாதிக்கப்படும் தலைப்புகள், உரையாற்ற வேண்டிய நிபுணர்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. அவர்களை முன்கூட்டியே தொடர்பு கொண்டு பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வருத்தம் தருகிறது
இந்தாண்டு ஜனவரி மாதமே தயாரிப்புகள் துவங்கப்பட்டு, பல கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனுள்ள மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக, நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்வி செயற்பாட்டை, சில ஊடகங்கள் தவறாக சித்தரிக்கின்றன. குறிப்பாக, சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் இணைந்து, தமிழக கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான அதிகாரப்பூர்வ மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருத்தம் அளிக்கிறது. இது, மாண்பை குலைப்பதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாரும் போக கூடாது!
ஊட்டியில் நாளை துவங்கும் மாநாட்டில் பங்கேற்க, துணை வேந்தர்கள் முன்கூட்டியே ஒப்புதல் அளித்துள்ளனர். தற்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, துணை வேந்தர் நியமன அதிகாரம் அரசிடம் வந்துள்ளது. இந்நிலையில், ஊட்டி மாநாட்டில் பங்கேற்க கூடாது என, துணை வேந்தர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால், மாநாட்டில் பங்கேற்பதா, கூடாதா என, உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு, துணை வேந்தர்கள் காத்திருக்கின்றனர்.