த.வெ.க., தனித்து போட்டியிடும்: ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்
சென்னை: ''சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்துதான் போட்டியிடும்,'' என, அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறினார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய, தமிழக அரசை கண்டித்தும், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bjjq3wpe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், கரூர் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவர். எம்.ஜி.ஆருக்கு பின், அரசியலுக்கு வரவிருந்த நடிகர் ரஜினி, தி.மு.க., மிரட்டலுக்கு பயந்து, 'ரெட் ஜெயன்ட்' நிறுவனத்தின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தனித்துப் போட்டியிட்டு வந்த ம.தி.மு.க.,வுக்கு, தி.மு.க., கூட்டணியில், நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என கூறிய கமலும், மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும், தி.மு.க., பக்கம் போய் விட்டனர். மக்கள் ஆட்சியை நோக்கி, இந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து தான் போட்டியிடும். அதற்காக, 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் தயார் செய்து விட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
'பாட்டிகளுக்கும் பாதிப்பு'
பீஹார், கர்நாடகா, ஒடிஷா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில், ஜாதிவாரியாக கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். அதைப் பற்றி சிந்திக்காமல், விளம்பரம் செய்து, மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது, தி.மு.க., அரசு. தமிழகத்தில், தினசரி கொலை, கொள்ளை நடக்கிறது. 2 வயது குழந்தை முதல் வயதான பாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளில் போதைப்பொருள் கிடைக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை நடத்தும் இந்த ஆட்சியாளர்களை, இனி மக்கள் நம்பப் போவதில்லை. - ஆனந்த், பொதுச்செயலர், த.வெ.க.,
பெண்கள் கூட்டம் குறைவு!
த.வெ.க., சார்பில் நேற்று, அனைத்து மாவட்ட தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. வழக்கமாக, த.வெ.க., சார்பில் எந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும், சரிபாதி பெண்கள் கூட்டம் இருக்கும். ஆனால், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், எல்லா மாவட்டங்களிலும் பெண்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதற்கான காரணம் குறித்து, த.வெ.க., தலைமை வட்டாரம் விசாரிக்கிறது.