கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக நா.த.க., முற்றுகை போராட்டம்
சென்னை: இலங்கைத் தமிழர்களை, கிங்டம் திரைப்படத்தில் தவறாக சித்தரித்து இருப்பதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டதால், சில இடங்களில், பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள, தெலுங்கு திரைப்படமான, கிங்டம் , தமிழக திரையரங்கில் நேற்று வெளியானது. இப்படத்தில், இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல் சித்தரித்து இருப்பதாக, நா.த.க.,வினர் குற்றம்சாட்டி உள்ளனர். இப்படத்தை திரையிட வேண்டாம் என, நா.த.க., நிர்வாகிகள், படம் திரையிடப்படவிருந்த, திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அளித்தனர். அவற்றை மீறி, பெரும்பாலான திரையரங்கில், நேற்று படம் வெளியானது. இதை கண்டித்து, நா.த.க.,வினர் திரையரங்கை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, ராமநாதபுரம், கோவை, திருவாரூர் உட்பட, பல்வேறு இடங்களில், நா.த.க.,வினர் திரையரங்கம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மதுரவாயல் ஏ.ஜி.எஸ்., திரையரங்கை முற்றுகையிட்ட, நா.த.க.,வினரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட சில இடங்களில், நா.த.க.,வினர் முற்றுகையை தொடர்ந்து, படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. திருச்சி உள்ளிட்ட சில இடங்களில், கிங்டம் படம் ரிலீசாகி இருக்கும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்தி முடித்த நா.த.க.,வினர், தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித் தெறிந்தனர். பின், படத்தை தொடர்ந்து திரையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி, தியேட்டர் நிர்வாகிகளிடம் மனு அளித்தனர். இதற்கிடையில், 'தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தமிழகத்தில், கிங்டம் படத்தை திரையிட, தமிழக அரசு அனுமதிக்க கூடாது. அப்படம் திரையிடப்பட்டால், திரையரங்கம் முற்றுகை போராட்டம் தொடரும்' என, நா.த.க., தலைமை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள, தமிழக திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, பட விநியோக நிறுவனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.