திருப்பூர்:''அமெரிக்க வரி விவகாரம் தற்காலிகமானது; இப்பிரச்னையை வெற்றிகொள்ள, ஏற்றுமதியாளர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பேசினார்.திருப்பூருக்கு நேற்று முன்தினம் வருகை தந்த அனந்த நாகேஸ்வரன் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை மன்ற உறுப்பினர் நீல்காந்த் மிஸ்ரா ஆகியோர், ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, பின்னலாடை தொழில் நிலை குறித்து உறுப்பினர்களின் கருத்துகளை கேட்டறிந்தனர்.திடீர் சவால் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்திருப்பது, பின்னலாடை ஏற்றுமதிக்கு திடீர் சவாலாக மாறியுள்ளது.திருப்பூரின் மொத்த உற்பத்தியில், 30 முதல் 35 சதவீதம் அளவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவதால், இதை எதிர்கொள்ள, மத்திய அரசின் சிறப்பு நிவாரண திட்டங்கள் அவசியம் தேவைப்படுகிறது'' என்றார்.வெற்றி பெறலாம் அனந்த நாகேஸ்வரன் பேசுகையில், ''நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அமெரிக்காவின், இறக்குமதி வரி விதிப்பு பல்வேறு தரப்பினருக்கும் வருத்தம் அளிக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள இரண்டாம்நிலை வரியான 25 சதவீதம் தற்காலிகமானது; இது தொடர்பாக ஏற்றுமதியாளர்கள் கவலைப்பட வேண்டாம். பல்வேறு சோதனைகளை கடந்து வெற்றி பெற்றது போல், இந்த பிரச்னையையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள, ஏற்றுமதியாளர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.சிறப்பாக கையாளலாம் நீல்காந்த் மிஸ்ரா பேசுகையில், ''அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு தொடர்பாக, நாடு முழுதும் உள்ள பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். வரி உயர்வு விவகாரம் தற்காலிக மானது.''திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சோர்வடைய வேண்டாம். வரும் காலங்களிலும், அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தை சிறப்பாக கையாள தயாராக வேண்டும். அமெரிக்காவில் வரும், 2030ல் நடைபெற உள்ள வரி விதிப்பு கூட்டத்துக்கு, இந்தியாவில் இருந்து திருப்பூர் பிரதிநிதிகளை அழைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்,'' என்றார்.