உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நவீன சுற்றுலா தலமாகிறது பிரதமர் பிறந்த வாத்நகர்

நவீன சுற்றுலா தலமாகிறது பிரதமர் பிறந்த வாத்நகர்

குஜராத்தில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊரான வாத்நகரில் தொல்லியல் அருங்காட்சியகம், நவீன கல்வி நிலையம், விளையாட்டு வளாகம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.குஜராத்தின் பழமையான நகரங்களில் ஒன்றான வாத்நகர், மேசானா மாவட்டத்தில் உள்ளது; இது, 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வளமான வரலாற்றை உடையது. ஏழு வெவ்வேறு வம்சங்களின் ஆட்சியை கண்டுள்ள இந்த நகரம், முக்கிய வர்த்தகத்துக்கான மையமாகவும் திகழ்ந்துள்ளது. ஹிந்து, பவுத்தம், ஜெயினம், முஸ்லிம் மரபுகளின் கலவையாகவும், வரலாற்று பாரம்பரியத்தின் பொக்கிஷமாகவும் உள்ளது.இத்தனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாத்நகரில் பிறந்த நரேந்திர மோடி, நம் நாட்டின் பிரதமர் ஆகும் வரை இந்த நகரம் குறித்து வெளியுலகம் அதிகம் அறியவில்லை.வாத்நகரின் பாரம்பரியத்தை போற்றவும், அதை சுற்றுலா தலமாக மாற்றவும் பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் மிகுந்த பலனை அளித்தன.மோடியின் வழிகாட்டுதலின்படி, வாத்நகரின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் பணியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பணியில் கரக்பூர், குவஹாத்தி, காந்திநகர், ரூர்கி ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். பல ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த புத்த மடாலயங்களின் மிச்சங்களை, தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். வாத்நகர் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது.பழமையான ஷர்மிஷ்தா ஏரி புதுப்பிக்கப்பட்டு, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலா பயணியரை ஈர்த்து வருகிறது.இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வரும் வாத்நகரை மேலும் வசீகரமான சுற்றுலா தலமாக மேம்படுத்த செய்து முடிக்கப்பட்டுள்ள மூன்று வளர்ச்சி திட்டங்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம்: மாநில தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குனரகத்துடன் இணைந்து மத்திய கலாசார அமைச்சகம் இதை உருவாக்கி உள்ளது. வாத்நகரில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த நகரின் வளமான மற்றும் பல அடுக்கு கலாசார வரலாற்றை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான மனித பரிணாம வளர்ச்சியைக் கொண்டுள்ளது.பயன்பாட்டில் உள்ள அகழ்வாராய்ச்சி தளத்தை இங்கு நேரடியாக காணலாம். மொத்தம், 298 கோடி ரூபாய் செலவில், நான்கு மாடிகளுடன், 1.35 லட்சம் சதுர அடி பரப்பளவில் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பிரேர்னா சங்குல்

வாத்நகரில், பிரதமர் நரேந்திர மோடி தன் ஆரம்ப கல்வியை பயின்ற பள்ளி, 72 கோடி ரூபாய் செலவில், 'பிரேர்னா சங்குல்' என்ற கல்வி நிலையமாக உருமாற்றப்பட்டுஉள்ளது. கடந்த 1888ல் துவங்கப்பட்ட இந்த பள்ளி, அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கல்வியை ஒழுக்க விழுமியங்களுடன் கலந்து போதிக்கும் நவீன கல்வி நிறுவனமாக உருமாற்றப்பட்டுள்ளது.

விளையாட்டு வளாகம்

உலகத்தரத்தில் விளையாட்டு பயிற்சி அளிக்கும் வளாகத்தை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார். மேலும், 33.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகத்தில், எட்டு வழி உடைய, 400 மீட்டர் செயற்கை தடகளப் பாதை, கால்பந்தாட்ட செயற்கை மைதானம், கபடி, கோகோ, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான தனி இடம், 100 ஆண்கள், 100 பெண்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன - நமது சிறப்பு நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை