சென்னை: ''தி.மு.க.,விடம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் அர்ஜுன ராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் செந்திலதிபன், முதன்மை செயலர் துரைவைகோ, துணைப் பொதுச்செயலர்கள் மல்லைசத்யா, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், டாக்டர் ரொக்கையா உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் தி.மு.க., அரசு தொடர்ந்திடவும், ஹிந்துத்துவா மதவாத சக்திகளை முறியடிக்கவும், கட்சி எடுத்த முடிவை, 2026 சட்டசபை தேர்தலிலும் கடைப்பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், விவசாய பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என, மத்திய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டில், அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமியை சிறுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியிட்டதற்கு கண்டனம். தொழிற்கல்வி பாடப்பிரிவை மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் வைகோ பேசும்போது, 'தமிழகத்தில் உள்ள பெரும் கட்சிகளில் ம.தி.மு.க.,வும் ஒன்று. கட்டமைப்பு உள்ள நம் கட்சி சார்பில், தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், வரும் சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்பது நம்முடைய இலக்கு. அந்த இலக்கு நோக்கி பயணப்பட்டு, தி.மு.க.,விடம் தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். 'அதற்கான முயற்சிகள் உரிய நேரத்தில் எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகளோ தொண்டர்களோ யாரும் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம். 'இலக்கை நோக்கி முன்னேறுவது, இலக்கை அடைவது போன்ற பணிகளை கட்சித் தலைமை பார்த்துக் கொள்ளும். இப்போதைக்கு, கட்சித் தொண்டர்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்' எனக் கூறியதாக, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.வைகோவின் இந்த உணர்ச்சிகரமான பேச்சைக் கேட்டு, நிர்வாகிகள் சந்தோஷமடைந்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.