கோவை: அரசியல் பயணத்தின் முக்கிய கட்டமாக, கோவையில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடத்திய பின், த.வெ.க., மீது பல அரசியல் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது. மக்களின், 'பல்ஸ்' அறிந்து கொள்ளும் ஓட்டுச்சாவடி முகவர்களின் பணி, அக்கட்சியில் வேகமெடுத்துள்ளது.த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவின் வழிகாட்டுதல் படி, ஓட்டுச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு, கோவையில் சமீபத்தில் நடந்தது. முக்கிய அம்சம்
கருத்தரங்கில் பங்கேற்க வந்த கட்சியினரைப் பார்த்து, விஜயை எதிரியாக பார்க்கும் அரசியல் தலைவர்களும் கிலி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.கருத்தரங்கு தவிர, கோவை, மதுரையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் தரப்பில் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதான பல கட்சிகளே, ஓட்டுச்சாவடி முகவர்கள் விஷயத்தில் திணறும் நிலையில், இதை பலப்படுத்தினால் மட்டும் கட்சிக்கு எதிர்காலம் உருவாகும் என்று ஆதவ் அர்ஜுனா கொடுத்த ஐடியா, கட்சியை பலப்படுத்தும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.ஓட்டுச்சாவடி முகவர்கள் தான், வார்டு வாரியாக சென்று, யார், யாருக்கு ஓட்டுப்பதிவு செய்தனர்; இனி யாருக்கு ஓட்டுப்பதிவு செய்யப்போகின்றனர், மக்களின் மனநிலை என்ன என்றெல்லாம் அறிந்து கொள்வர். கட்சியில், இவர்களின் பணி மிக முக்கியமானது.கோவையில் நடந்த கருத்தரங்குக்கு பின், ஓட்டுச்சாவடி முகவர்கள் த.வெ.க.,வில் வேகமாக களமிறங்கி விட்டனர்.இதனால், த.வெ.க., வை தங்கள் கூட்டணிக்குள் எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்தோர், த.வெ.க.,வை நோக்கி காய் நகர்த்தத் துவங்கி உள்ளனர்.இது குறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சினிமா நடிகர்களுக்கு அரசியல் ஒத்துவராது; இப்படித்தான், ஏற்கனவே கட்சி துவங்கப் போவதாக அறிவித்து, துவங்குவதற்கு முன்பாகவே பின்வாங்கினார் நடிகர் ரஜினி.அந்த வகையில் தான், அரசியல் பாதையில் நடிகர் விஜயும் நிலைக்க மாட்டார் என, அரசியல் பார்வையாளர்கள் துவக்கத்தில் கூறினர். உறுதியாகும் கட்டமைப்பு
ஆனால், அதையெல்லாம் விஜய் பொருட்படுத்தவில்லை. நிதானமாக திட்டமிட்டு அரசியல் செய்தால் போதும் என, கட்சியினருக்கு உத்தரவிட்டு அதன் வழியில் செயல்படுகிறார். பூத் கமிட்டி வலுவாக இருந்தால் மட்டுமே தேர்தலில் சாதிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், கட்சியின் அடிமட்டம் உறுதியாக இருக்க வேண்டும் என்றால், பூத் கமிட்டி வலுவாக இருக்க வேண்டும் என்று சொல்லி, அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதற்காக, பூத் முகவர்கள் கருத்தரங்கை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிட்டு, முதற்கட்டமாக கோவையில் பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார். அடுத்தடுத்தும், சென்னை, மதுரை என பூத் முகவர்கள் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுஉள்ளார். இந்த கருத்தரங்குகள் தமிழகம் முழுதும் நடத்தி முடிக்கப்படும்போது, கட்சியின் கட்டமைப்பு மிகவும் உறுதியாகிவிடும். த.வெ.க., உறுப்பினர்கள் எண்ணிக்கை, 80 லட்சத்தை தாண்டி விட்டது; 2 கோடி இலக்கை விரைவில் அடைவோம். இதெல்லாம் திட்டமிட்டப்படி நடந்து முடிந்தால், வரும் தேர்தலில் விஜய் 'கிங் மேக்கர்' ஆக இருப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.