உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வக்பு மசோதா கருத்து கேட்பு சுற்றுப்பயணம் புறக்கணிப்பு!: ஜே.பி.சி., எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தடாலடி

வக்பு மசோதா கருத்து கேட்பு சுற்றுப்பயணம் புறக்கணிப்பு!: ஜே.பி.சி., எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தடாலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் தலைவர் தன் இஷ்டம்போல செயல்படுவதை கண்டித்து, நாடு முழுதும் இன்று துவங்கவுள்ள கருத்துக் கேட்பு சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கிறோம்' என, வக்பு மசோதாவை ஆய்வு செய்து வரும் கூட்டுக்குழுவில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அறிவித்துள்ளனர்.வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்கு முறை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவை ஜே.பி.சி., எனப்படும் பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது.இதுவரையில், 25க்கும் மேற்பட்ட தடவை கூடி பல்வேறு தரப்பினரையும் வரவழைத்து இக்குழு கருத்துக் கேட்டுள்ளது.குழுவின் தலைவரும், பா.ஜ., மூத்த எம்.பி.,யுமான ஜெகதாம்கா பால், தன் இஷ்டம் போல செயல்படுவதாகவும், தங்களை எந்த வகையிலும் கலந்தாலோசிப்பதில்லை என்றும், குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சபாநாயகரிடம் புகார்

இதுகுறித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில், இக்குழுவில் இடம்பெற்றுள்ள பா.ஜ., - எம்.பி.,யான தேஜஸ்வி சூர்யா, தன் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு, ஜெகதாம்பிகா பாலை அழைத்துச் சென்றார். ஹுப்ளி மாவட்ட விவசாயிகளைச் சந்தித்த அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.அந்த விவசாயிகள், தங்கள் நிலங்களை வக்பு வாரியம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறி முறையீடு செய்தனர்.

கூட்டுக்குழு திட்டம்

அதை பதிவு செய்து கொண்ட ஜெகதாம்பிகா பால், இந்த விபரங்கள் பார்லிமென்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சேர்க்கப்படும் என, கூறினார்.இந்நிலையில்தான், மேலும் பல்வேறு தரப்புக்களின் கருத்துகளை கேட்டறிவதற்காக குவஹாத்தி, புவனேஸ்வர், கோல்கட்டா, பாட்னா, லக்னோ ஆகிய ஐந்து நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்பது மாநிலங்களின் வக்பு வாரிய நிர்வாகிகளை சந்தித்துப் பேச, கூட்டுக்குழு திட்டமிட்டிருந்தது.இன்று முதல், வரும் 14ம் தேதி வரை இந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும், இந்த சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

காரணம் என்ன?

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியதாவது:ஜெகதாம்பிகா பால் எதற்காக, கர்நாடகா சென்றார்? அது குறித்த எந்த தகவலையும் எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காதது ஏன்? தனிப்பட்ட விஷயமாக செல்வது அவர் விருப்பம். கட்சிப் பணிக்காக என்றாலும், நாங்கள் எதுவும் கூறப்போவதில்லை.ஆனால் அங்கு சென்று, வக்பு சொத்துக்கள் மீதான புகார்கள் என்ற பெயரில் விவசாயகளிடம் விசாரிக்கிறார். எங்களிடம் ஒரு வார்த்தை கூட இதுபற்றி அவர் கூறவில்லை.எல்லாவற்றிலும் அவர் இஷ்டம் போல செயல்படுகிறார். யாரை அழைப்பது என்பதில் துவங்கி, எப்போது கூட்டம் நடத்துவது என்பது வரையில் எல்லாவற்றையுமே அவரே முடிவு செய்கிறார்.பார்லிமென்ட் ஜனநாயகத்தில் சபாநாயகரால் அமைக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுக்குழுவில், உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க கூடாது. தினந்தோறும், காலையில் துவங்கி இரவு வரையில் கூட்டம் நடத்துகிறார். கருத்துகளை படித்துப் பார்த்து புரிந்து கொள்ளக் கூட எங்களுக்கு அவகாசம் இருப்பதில்லை.இந்த சுற்றுப்பயணத்திற்கு தயாராவதற்கு கூட எங்களுக்கு நேரம் தரப்படவில்லை. தேசிய நோக்கத்தில் செயல்படாமல், ஏதோ ஒரு உள்நோக்கத்துடன்தான், ஜெகதாம்பிகா பால் செயல்பட்டு வருகிறார். மொத்தத்தில், ஜே.பி.சி., என்பதே கேலிகூத்தாக மாறிவிட்டது. இதனால் நாடு முழுதும் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த கருத்துக் கேட்பு சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 09, 2024 13:42

எதிர்க்கட்சிகளுக்கு அரசை எதிர்ப்பது என்றே முடிவு செய்து கொண்டு உள்ளார்கள். அது நல்லதா தீயதா என்று ஆராய்வதில்லை. எதிர்க்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். ஆகவே எப்படி இருந்தாலும் இவர்கள் எதிர்கட்சிகள் எதிர்க்க தான் போகிறது. இரண்டாவது வக்பு வாரியம் தன்னிச்சையாக செயல்பட்டு இந்தியாவே அதன் சொத்தாக கூறுகிறது. சென்னை அருகே இந்து கோயில் வக்பு வாரிய இடத்தில் இருப்பதாக கூறுகிறது. ஆனால் அக்கோயில் கட்டப்பட்ட ஆண்டு இஸ்லாம் என்ற பிறக்கவில்லை. அது எப்படி வக்பு வாரிய இடத்தில் வரும். இது போன்ற கேள்விகள் குறைகள் இந்தியா முழுவதும் இருக்கும். ஆகவே சுற்றுப்பயணம் சென்றால் வக்பு வாரியத்திற்கு எதிராக பல புகார்கள் நிரூபிக்கப் படும். இதை தவிர்க்கவே எதிர்கட்சிகள் போடும் நாடகம் தான் புறக்கணிப்பு. இது திராவிட மாடல். அதிமுக ஆட்சியில் இருந்த போது தினம் தினம் வெளிநடப்பு புறக்கணிப்பு செய்தவர்கள். இந்த திராவிட மாடல் தான் இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் பின்பற்றுகின்றனர்.


Nandakumar Naidu.
நவ 09, 2024 02:21

கருத்துக்கேட்பு என்ன அவசியம் இருக்கிறது? வக்பு வாரியத்தை உடனடியாக நாடு முழுவதிலும் இருந்து நீக்க வேண்டும்.. வக்பு வாரியமே இருக்கக்கூடாது.