சென்னை: கட்டுமான தொழிலாளர் நலநிதி என்ற பெயரில், ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வசூலாகியும், புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படுவதில்லை என, கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மீது புகார் கூறப்படுகிறது.தற்போதைய நிலையில், தமிழகத்தில், 20 லட்சம் பேர் கட்டுமான தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த, கட்டுமான தொழிலாளர் நல வாரியம் 1996ல் துவக்கப்பட்டது. இதற்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்காக, சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதன்படி, ஒவ்வொரு கட்டுமான திட்டத்துக்கும் அனுமதி அளிக்கும்போது, அதன் மொத்த மதிப்பில், 1 சதவீத தொகையை, கட்டுமான தொழிலாளர் நல நிதியாக செலுத்த வேண்டும். கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் துறைகள், இதற்கான வங்கி வரைவோலையை பெற்று, சம்பந்தப்பட்ட வாரியத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த வகையில், ஆண்டுக்கு 750 முதல் 800 கோடி ரூபாய் கட்டுமான தொழிலாளர் நல நிதியாக வசூலாகிறது. ஆனால், இதில் மிக குறைந்த அளவு தொகை மட்டுமே, நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: நல்ல நோக்கத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை துவக்கி, அதற்கான நிதி ஆதாரத்தை, அரசு ஏற்பாடு செய்தது. இதனால், வேறு எந்த வாரியத்திலும் இல்லாத அளவுக்கு அதிக தொகை, இந்த வாரியத்தில் மட்டுமே வசூலாகிறது.தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் வரை வசூலானாலும், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கே நலத் திட்டங்களுக்கு செலவு செய்யப்படுகிறது. மீதித்தொகை என்னவாகிறது என்பதே தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.