த.வெ.க., - நா.த.க.,வுக்கு ஆட்களை சேர்ப்பது யார்? உளவுத்துறை விபரம் சேகரிப்பு
                            வாசிக்க நேரம் இல்லையா?
                             செய்தியைக் கேளுங்கள் 
                              
                             
                            
- நமது நிருபர் - த.வெ.க., - நா.த.க., கட்சிகளுக்கு ஆட்களை சேர்ப்பது யார் என்று உளவுத்துறையினர், அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் விபரம் சேகரிக்கின்றனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பணிகளை துவக்கி உள்ளன. தமிழகத்தின் புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும், கடந்த இரு மாதங்களாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அக்கட்சித் தலைவர் விஜய் வாரந்தோறும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கரூர் துயர சம்பவம் நடந்தது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளின் தேர்தல் பணிகளையும சில வாரங்கள் முடக்கியது. இந்நிலையில் கடந்த, பத்து நாட்களாக, அனைத்து கட்சிகளும் மீண்டும் தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றன. த.வெ.க., கூட, கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க நிர்வாகக்குழுவை அமைத்து தேர்தல் பணிகளை மீண்டும் துவக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதில் த.வெ.க., மற்றும் நா.த.க., கட்சிகளுக்கு அதிகளவில் இளைஞர்கள் கூடுகின்றனர். இது, ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இரு கட்சியின் தொண்டர்களையும் ஒருங்கிணைப்பது யார், அந்த கட்சிகளுக்காக யார் செலவு செய்கின்றனர், அவர்களின் பின்புலம் என்ன, அவர்கள் அந்த கட்சிகளில் வகிக்கும் பதவிகள் என்ன என்பது போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த விபரங்களை, எஸ்.பி.சி.ஐ.டி., எனும் உளவுத்துறையினர் தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக சேகரித்து, தங்களின் தலைமைக்கு அனுப்பி உள்ளனர். இதன்மூலம், த.வெ.க., - நா.த.க., ஆகிய கட்சிகளில் உள்ள இளைஞர்கள், பெண்களின் ஓட்டுகள், பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தி.மு.க.,வின் அச்சம் வெளிப்பட்டுள்ளதாக, உளவுத்துறை போலீசாரே கூறுகின்றனர்.