உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துரைமுருகன் வசமிருந்த கனிமவளம் அமைச்சர் ரகுபதியிடம் கொடுத்தது ஏன்?

துரைமுருகன் வசமிருந்த கனிமவளம் அமைச்சர் ரகுபதியிடம் கொடுத்தது ஏன்?

தமிழக அமைச்சரவையில், நேற்று மூத்த அமைச்சர்கள் இருவரின் துறைகள் மாற்றப்பட்டன.நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த, கனிமவளத் துறை பறிக்கப்பட்டு, சட்ட அமைச்சராக இருந்த ரகுபதியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்த சட்டத்துறை, துரைமுருகனுக்கு கூடுதலாக தரப்பட்டுள்ளது.அதன்படி, இனிமேல் நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சராக, துரைமுருகன் செயல்படுவார். மணல், தாது மணல், கல்குவாரி உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்கும், 'வளமான' கனிமவளத் துறை அமைச்சராக, அதாவது இயற்கை வளத்துறை அமைச்சராக ரகுபதி இருப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, இதற்கான உத்தரவுகளை, கவர்னர் ரவி பிறப்பித்துள்ளார். திடீரென துறைகள் மாற்றப்பட்டது குறித்து, கோட்டை வட்டாரங்கள் கூறியதாவது:

கனிமவளம் கடத்தல்

தமிழகத்தில் இருந்து கனிமங்கள், அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, 2023ல் சில இடங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றி உள்ளது. இதன் விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அடுத்த, 11 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.இந்நிலையில், கனிமவள கடத்தலை தடுக்க, அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டவில்லை. இது தொடர்பாக, சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பியபோது, 'புதிதாக எதுவும் நடக்கவில்லை; உங்கள் ஆட்சியிலும் நடந்தது' என, கிண்டலாக துரைமுருகன் பதில் அளித்தார். இதை, முதல்வர் ஸ்டாலின் ரசிக்கவில்லை. சட்டசபை நடந்தபோது, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு நடத்திய துரைமுருகன், ஜல்லி, 'எம் - சாண்ட்' போன்றவற்றின் விலையை உயர்த்த, அவர்களுக்கு அனுமதி அளித்தார். உடனே அவர்கள் யூனிட்டுக்கு, 1,000 ரூபாய் என விலையை அதிகரித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த கட்டுமான நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு கட்டுமான ஒப்பந்ததாரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். விலை உயர்வால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படும் அபாயம் உருவானது. அதைத் தொடர்ந்து, முதல்வர் உத்தரவின்படி, குவாரி உரிமையாளர்களை மீண்டும் அழைத்துப் பேசி, விலை உயர்வை திரும்பப் பெற, துரைமுருகன் உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டு

இப்பிரச்னையை துரைமுருகன் முறையாக கையாளவில்லை என, கட்டுமான துறையினர் குற்றம்சாட்டினார். இதன் காரணமாக, அவர் வசமிருந்த கனிம வளத்துறை பறிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, கனிமவளத் துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.மணல் குவாரிகள் நடத்துவோரில், புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரகுபதியிடம், கனிமவளத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர் என்பதால், அமலாக்கத் துறை விசாரணை விவகாரங்களை எளிதாக எதிர்கொள்வார் என, முதல்வர் தரப்பு நம்புகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன், 86, உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், வயது மூப்பால் வரும் பிரச்னைகளுக்கு, அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சளி பிரச்னை அதிகரித்ததால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில், நேற்று அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த, கனிமவளத் துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Anantharaman Srinivasan
மே 10, 2025 14:05

கருணாநிதி காலம் முதல் அடித்த கொள்ளை போதாத.? 85 வயசாச்சு. இன்னுமென்ன பதவி வேண்டிகிடக்கிறது. வெளியில் தள்ள வேண்டியது தானே.


Ramesh Sargam
மே 09, 2025 20:28

ரகுபதி கொஞ்ச நாட்கள் கனிமவளத்தை கொள்ளையடிக்கட்டுமே என்கிற ஒரு நல்ல எண்ணத்தில்தான். இதெல்லாம் நாமே புரிந்துகொள்ளவேண்டும்.


spr
மே 09, 2025 17:06

"கட்டுமான நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன." இதுதான் காரணம் தனக்கு வலிச்சா தானா நடக்கும் ஏதோ 85 வயசாச்சாம் இன்னும் கொஞ்ச காலம் ஆண்டவன் பார்த்துக் கொள்வானோ எ துவும் நடக்க மாட்டேங்குதே


theruvasagan
மே 09, 2025 16:58

உண்மையான காரணம் என்னன்னு சொல்லட்டுமா. ஆப்பரேஷன் சிந்தூர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முன்னணியில் போயிட்டுருக்கில்ல. அதை பின்னுக்கு தள்ளத்தான் இந்த மேட்டரை எடுத்து விட்டுருக்காப்பல. இன்னிக்கு பாருங்க இந்த மேட்டர்தான் அமெரிக்காவுல ஆரம்பிச்சு ஆஸ்திரேலியா வரைக்கும் ஹாட் டாபி்க்கா பேசப்படுது.


Sivakumar
மே 09, 2025 16:47

Satta Sabai Therthalai Manadhi Vaiththu... Vetkamaaha Illayaa thamizh makkalukku?


theruvasagan
மே 09, 2025 16:12

பருத்தி கொட்டையையும் புண்ணாக்கு மூட்டையையும் இடம் மாத்தி வைத்தால் நல்லதுன்னு வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லியிருக்கோ என்னவோ.


அரவழகன்
மே 09, 2025 14:45

டப்பு துட்டு மணி காசு பணம் தான்.. வேறென்ன...


அப்பாவி
மே 09, 2025 09:58

எல்லோருக்கும் எல்லாம். ஒருத்தரே சாப்புட்டா அடுத்தவங்க எப்போ சாப்புடறது? இன்னும் ஒரு வருசம்தான் இருக்கு.


raja
மே 09, 2025 06:13

இதில் உள்ள செய்தி எனக்கு உண்மையாக படவில்லை... திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்துக்கு அடித்த கொள்ளையில் பங்கு சரியாக தந்திருக்க மாட்டான் இந்த கட்ட துறை...


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 09, 2025 04:52

ஸ்டாலின் இடது கையில் உள்ளதை வலது கைக்கும் வலது கையில் உள்ளதை இடது கைக்கும் மாற்றி வைத்துள்ளார். துரைமுருகன் கைதாவாதை தடுக்க முயற்சி செய்கிறார். அமலாக்க துறை துரைமுருகனை கைது செய்தால் திமுக வக்கீல்கள் அமலாக்க துறையை எதிர்த்து கோர்ட்டில் வாதாடி வழக்கு விசாரணையை இழுத்தடிக்க அல்லது வழக்கு விசாரணையை திசை திருப்பச் செய்யும் செயல் இது.


முக்கிய வீடியோ