உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்.எம்.ஆர்., சேர்க்கப்படுமா?

தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்.எம்.ஆர்., சேர்க்கப்படுமா?

சென்னை :'தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால், தேசிய தடுப்பூசி அட்டவணையில், 'மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா' என்ற, எம்.எம்.ஆர்., தடுப்பூசியை சேர்க்க வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினரிடையே பரவும் பொன்னுக்கு வீங்கி என்ற மம்ப்ஸ் நோய், காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.உமிழ்நீர் சுரப்பிகளில் வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படும். பொன்னுக்கு வீங்கி பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் வாயிலாக, பிறருக்கு பரவும். உடலுக்குள் ஊடுருவிய ஒரு வாரத்தில் இருந்து, 16 நாட்களுக்குள் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.இந்நோயால், 2021 - 22ம் ஆண்டில், 61 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்; பின், 2022 - 23ல், 129 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், 2023 - 24ல், 1,091ஆக அதிகரித்துள்ளது. தட்ப வெப்பநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால், இவ்வகை பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அதனால், தேசிய தடுப்பூசி திட்டத்தில், எம்.எம்.ஆர்., தடுப்பூசியையும் இணைக்க வேண்டும் என, பொது சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய தடுப்பூசி அட்டவணையில், எம்.ஆர்., எனப்படும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதேநேரம், எம்.எம்.ஆர்., எனப்படும் தட்டம்மை, மம்ப்ஸ், ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. தடுப்பு மருந்துகளை காட்டிலும், நோய் எதிர்பாற்றலே, இவற்றை சரிசெய்து விடும் என்பதால், இதுவரை செலுத்தப்படாமல் இருந்தது. ஆனால், ஆண்டுதோறும் பொன்னுக்கு வீங்கி நோய் பரவல் அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில், எம்.எம்.ஆர்., தடுப்பூசி வழங்க வேண்டும். இதுகுறித்து, மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ