உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் விஜய் போட்டி? ஜோதிடர் ஆலோசனையை தொடர்ந்து சர்வே

வி என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் விஜய் போட்டி? ஜோதிடர் ஆலோசனையை தொடர்ந்து சர்வே

ஜோதிடர் ஆலோசனையின்படி, 'வி' என்ற முதல் எழுத்தில் துவங்கும், சட்டசபை தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜய் போட்டியிட்டால், அத்தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என, 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், கடந்த செப்., 13ம் தேதி, மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்கினார்; இது, டிச., 20ம் தேதி வரை நடக்க இருந்தது. திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், பிரசார பயணத்தை நடத்தி முடித்தார். கரூரில், கூட்ட நெரிசல் காரணமாக, 41 பேர் இறந்தனர். இதனால், தன் பிரசார பயணத்தை விஜய் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். சட்டசபை தேர்தலில், தான் போட்டியிடும் தொகுதி, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இருக்க வேண்டும் என விஜய் கருதுகிறார். இதனால், அவரது குடும்ப ஜோதிடர் ஒருவர் தெரிவித்த ஆலோசனையின்படி, 'வி' என்ற முதல் எழுத்தில் துவங்கும் சட்டசபை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். 'வி' என்றால் விக்டரி, வெற்றி என அர்த்தம். விஜய் பெயரின் முதல் எழுத்து 'வி' என்பதால், அந்த எழுத்தில் துவங்கும், சட்டசபை தொகுதி ராசியாக இருக்கும் என, ஜோதிடர் கணித்துள்ளார். இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: விஜய் தன் கட்சியை துவங்கியதும், முதல் மாநாட்டை வடக்கு மண்டலத்தை மையமாக வைத்து, விக்கிரவாண்டி தொகுதியில் நடத்தி வெற்றி கண்டார். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை, மேற்கு மண்டலமான கோவையில் நடத்தினார். காவல் துறை அடக்குமுறைக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து, தென் மாவட்டங்களை மையமாக வைத்து, மதுரையில், கட்சியின் இரண்டாவது அரசியல் மாநாட்டை நடத்தினார். டெல்டா பகுதிகளை மையமாக வைத்து, மக்கள் சந்திப்பு பிரசாரத்தை துவக்கினார். கரூர் துயர சம்பவத்தால், மக்கள் சந்திப்பு பயணம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும், ஆறு மாதங்களே உள்ள நிலையில், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அவர் போட்டியிடும் தொகுதி, நட்சத்திர அந்தஸ்தை பெறும். கட்சியின் கட்டமைப்பு வலுவாக உள்ள தொகுதியில் போட்டியிட, விஜய் முடிவு செய்துள்ளார். எனினும், ஜோதிடரின் ஆலோசனையை தொடர்ந்து, தேர்தல் வியூக வகுப்பாளரின் முடிவையும் தெரிந்து கொள்ள விஜய் விரும்புகிறார். எனவே, ஜோதிடர் ஆலோசனையின்படி, 'வி' என்ற முதல் எழுத்தில் துவங்கும், ஒன்பது சட்டசபை தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு குறித்து, அக்குவேறு ஆணி வேறாக அலசப்படுகிறது. அத்தொகுதிகளில் பெண்கள், இளைஞர்கள், புதுமுகங்களின் ஓட்டு சதவீதம், கட்சியின் கட்டமைப்பு பலம், விஜய் போட்டியிட்டால் அவரது வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து, 'சர்வே' எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாலாஜி
அக் 18, 2025 08:10

"பு" (புஸ்ஸி) என்ற எழுத்தில் துவங்கும் தொகுதிகளில் எதையாவது தேர்ந்து எடுங்க விஜய்.


Sun
அக் 18, 2025 08:08

நல்ல வேளை நம்ம முதல்வர் ஜோதிடம் பார்க்க மாட்டார் என நினைக்கிறேன். ஜோதிடர் அவரை ஸ் என உங்கள் பெயரின் முதல் எழுத்தில் ஆரம்பிக்கும் தொகுதியில் போய் நில்லுங்கள் எனச் சொல்லி விட்டால் அவர் எங்கே போய் ஸ் தொகுதியை தேடுவார்?