மேலும் செய்திகள்
சோழர் காலத்து முருகன் சிற்பம் கண்டுபிடிப்பு
05-Jun-2026
விழுப்புரம்: திண்டிவனம் அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கள ஆய்வில் ஈடுபட்போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த அரிய விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து, ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: தைலாபுரம் கிராமத்தின் பழைய பெயர் தைலகுல காலபுரம் என்பதாகும். தைலகுல காலன் என்பது, சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜ சோழனின் விருது பெயர்களில் ஒன்றாகும். சோழர் ஆட்சியில் வைக்கப்பட்ட இந்தப் பெயர் கி.பி.13ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியிலும் தொடர்ந்தது. இவ்வூரில் கண்டறியப்பட்ட விக்கிரம பாண்டியன் கல்வெட்டின் மூலம் அறியலாம். தைலகுல காலபுரம் எனும் பெயர் காலப்போக்கில் தைலாபுரம் என சுருங்கிவிட்டது. சோழர், பாண்டியர் காலங்களில் மட்டுமின்றி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்லவர் ஆட்சியிலும் தைலாபுரம் சிறப்புடன் விளங்கியுள்ளது. இங்குள்ள மருந்தீஸ்வரர் கோவில் வளாகத்தின் பின்புறம் விஷ்ணு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் பெரிய பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறார். அவரது பின்னிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்கி இருக்கின்றன. முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. நீண்ட காதணிகள், கழுத்தணி காணப்படுகின்றன. மார்பில் தடித்த பூணுல் தவழ்கிறது. வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் இவரை சுகாசன விஷ்ணு என்றும் அழைப்பர். தனது கால் வரையிலான பீதாம்பரம் எனும் ஆடையை அணிந்து இருக்கிறார். பல்லவர் கால கலை நயத்துடன் இச்சிற்பம் மிகுந்த கலைநயம் நேர்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.8-9ம் நூற்றாண்டு ஆகும். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனை மூத்த தொல்லியலாளர் ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயிரம் ஆண்களுக்கு முன்பு இக்கிராமத்தில் பெரிய வைணவ ஆலயம் இருந்திருக்கிறது. விஷ்ணு சிற்பத்தின் அருகிலேயே பல்லவர் கால முருகன் சிற்பம் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. தாமரை மலர் மீது அமர்ந்த நிலையில் முருகன் காட்சியளிக்கிறார். இங்கு வழிபாட்டில் இருக்கும் சண்டிகேஸ்வரர் சிற்பமும் மிகவும் பழமை வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
05-Jun-2026