பள்ளியில் தேனீக்கள் கொட்டி 50 மாணவர்கள் பாதிப்பு
சிறுபாக்கம்: அரசு பள்ளியில் தேனீக்கள் கொட்டியதால் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த மங்களூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுபுற கிராமங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளி வளாகத்திலுள்ள வேப்ப மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. நேற்று காலை 9:00 மணியளவில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, மாணவர்கள் சிலர் தேன் கூட்டின்மீது கல் வீசியதில், கூட்டில் இருந்த தேனீக்கள், பள்ளி வளாகத்தில் இருந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை கொட்டியது. இதனால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் மங்களூர் வட்டார அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக 30க்கும் மேற்பட்டோர் வேப்பூர், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.