புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.2.36 லட்சம் மோசடி
புதுச்சேரி: இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, மொத்தமாக ஆடை ஆர்டர் செய்த புதுச்சேரி வாலிபர் ரூ. 90 ஆயிரத்தை இழந்தார்.புதுச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் பால். இவர், இன்ஸ்டாகிராமில் ஆடை விற்பனை தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். அதில், குறைந்த விலைக்கு கிடைக்கும் என நம்பி ரூ. 90 ஆயிரத்து 700 செலுத்தி, ஆடைகளை ஆர்டர் செய்தார்.ஆனால், ஆடைகள் வரவில்லை. அதன் பிறகே, இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம் போலி என்பது தெரியவந்தது.வாணரப்பேட்டையை சேர்ந்த பிவ்யா என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல் பேசி, ஆன்லைனில் குறைந்த வட்டியில் 5 லட்சம் லோன் தருவதாக கூறினார். பிவ்யா, லோனுக்கு விண்ணப்பித்தார். மர்ம நபர் லோன் பெற செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறினார். அதை நம்பி, பிவ்யா 76 ஆயிரத்து 800 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.இதேபோல், நண்பர்கள் பெயரில் போலி பேஸ்புக் துவங்கி, அதன் மூலம் மருத்துவ அவசரம் என கூறி, புதுச்சேரியை சேர்ந்த பாலசுப்ரமணியனிடம் 20 ஆயிரம் ரூபாய், அரியாங்குப்பம் அய்யனாரிடம் 30 ஆயிரத்தையும், ஆன்லைனில் பெற்று, மர்ம நபர்கள் ஏமாற்றினர்.இதுபோல், புதுச்சேரி தொழிற்பேட்டையை சேர்ந்த பிரவாஸ் 6 ஆயிரத்து 900 ரூபாய், லோகச்சந்தர் ரூ. 5 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்த ஷியாமளா 6 ஆயிரத்து 600ம் என, மொத்தம்7 பேர், ஆன்லைன் மோசடி கும்பலை நம்பி2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் இழந்தனர்.புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.