700 கிலோ மறுசுழற்சி ஆலமரம் மக்கள் பார்வைக்கு அர்ப்பணிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசிய மரமான ஆலமரம் 700 கிலோ மறுசுழற்சி இரும்பினால் உருவாக்கி பொதுமக்களின் பார்வைக்காக மூன்று நாள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.இதனை, அமைச்சர் லட்சுமிநாராயணன் திறந்த வைத்தார். நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, இந்திரா காந்தி தேசிய கலை மைய புதுச்சேரி மண்டல இயக்குநர் ராகவன், முன்னாள் இயக்குநர் கோபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.இந்த மறு சுழற்சி தேசிய ஆலமரத்தை லலித் கலா அகாடமி தேசிய விருதாளர் சரவணன்,41, என்பவர் கண்காட்சியாக வைத்துள்ளார். அவர் கூறியதாவது:ஆலமரம் என்றவுடனே அதன் பெரிய பெரிய விழுதுகள் நமக்கு நினைவுக்கு வரும். அதன் விழுதுகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, மகிழ்ச்சியாக ஊஞ்சல் ஆடி குழந்தைப் பருவத்தை இயற்கையோடு கழித்து இருப்போம்.சில ஆண்டுகளுக்கு அதிகமாக இருந்த ஆலமரங்கள், வெகுவாக குறைந்துவிட்டன. இதன் காரணமாகவே ஆலமரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 700 கிலோ மறுசுழற்சி இரும்பு கொண்டு வடிவமைத்துள்ளேன். 7.5 அடி உயரம், 10 அடி அகலம் கொண்ட இந்த ஆலமரம் மூன்று நாள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது' என்றார்.