அதிரடி மாற்றம்
மின் இணைப்பு அனுமதி வழங்கும் நடைமுறை... 100 கேவிஏ வரை இனி சுய சான்றிதழ் போதும்புதுச்சேரி: மின் இணைப்பிற்கு அனுமதி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு, தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை எளிதாக்கவும் மின் விநியோக நடைமுறைகளில் அதிரடியாக புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மின் துறையில் நான்கு பழைய காலத்து நடைமுறைகளில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளன. காலதாமதத்திற்கு முற்றுப்புள்ளி இதுவரை புதிய மின் இணைப்பு அல்லது கூடுதல் மின்சுமை கோரும்போது, மின் துறை அதிகாரிகள் நேரடி ஆய்விற்கு பிறகே அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறை ரத்து செய்து, தற்போது சுய-சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை. மின்நுகர்வோர் இணைய வழியில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் மற்றும் சுய-சான்றிதழ் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும். குறிப்பாக, 100 கிலோ வோல்ட் ஆம்பியர் வரையிலான உள்நாட்டு, வணிக மற்றும் தொழில்முறை மின் இணைப்புகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தும். சுய சான்றிதழ் அளித்துவிட்டு புதிய மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். வயரிங் சான்றிதழில் எளிமை மின் இணைப்பு பெறுவதற்கு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து டெஸ்ட் ரிப்போர்ட் பெறுவது கட்டாயமாக இருந்தது. இது பெரும்பாலும் பொதுமக்களுக்கு அலைச்சலையும் கூடுதல் செலவையும் ஏற்படுத்தியது. புதிய விதியின்படி உள்வீட்டு வயரிங் பணிகளுக்கு நுகர்வோரின் சுய-சான்றளிப்பு போதுமானது. ஒப்பந்ததாரர் சோதனை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண முறையில் வெளிப்படைத்தன்மை: வைப்புத்தொகை மற்றும் இதர கட்டணங்களைச் செலுத்துவதில் இருந்த சிக்கல்கள் இணைய வழி முறை மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான கூட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரித்த நிலையான கட்டணங்களே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உள்கட்டமைப்புகளில் குறிப்பாக மின்மாற்றிகள் அல்லது கம்பிகள் தேவைப்படாத இடங்களில், விண்ணப்பிக்கும் போதே இணையதளத்தில் கட்டணம் செலுத்தலாம். உள்கட்டமைப்பு தேவைப்படும் இடங்களில், பணிகள் முடிந்தவுடன் இணையதளம் வழியாகக் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்படும். நிதிச் சுமை குறைப்பு: மீட்டர் பொருத்துவதற்கான வைப்பு தொகை ரத்து இந்த அரசாணையின் மிக முக்கியமான அம்சம். மீட்டர் பாதுகாப்பு வைப்புத்தொகை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இது புதிய மின் இணைப்பு கோரும் சாதாரண நுகர்வோருக்கு நிதி ரீதியாக பெரிய நிம்மதியை அளித்துள்ளது. மின் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் பரிந்துரைகளை ஏற்று, நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் புதிய சீர்திருத்தம் மின் துறையில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த சிவப்பு நாடா முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 100 கே.வி.ஏ., வரையிலான மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.