பந்த் அறிவித்துள்ள தலைவர்களை கைது செய்ய அ.தி.மு.க., கோரிக்கை
புதுச்சேரி: பந்த் போராட்டம் அறிவித்துள்ள தலைவர்களை கைது செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., போலீசில் புகார் அளித்தது.புதுச்சேரி அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் டி.ஜி.பி., அலுவலகத்தில், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யாவை சந்தித்து அளித்த மனு;மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. போலீஸ் அனுமதி பெற்று மக்களுக்கு பாதிப்பு இல்லாதபடி, அ.தி.மு.க., உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.ஆனால் காங்., - தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., கட்சிகள் இன்று பந்த் போராட்டம் அறிவித்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பந்த் போராட்டம், சட்ட விரோதமானது. இதனை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பல முறை சுட்டி காட்டி உள்ளது.மலிவு விளம்பரத்திற்காக நடக்கும் பந்த் போராட்டத்தால் மக்கள் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், 170வது பிரிவை பயன்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்த் அறிவித்துள்ள இண்டியா கூட்டணி தலைவர்களை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்.ஆர்.காங்., பா.ஜ., தி.மு.க.வுடன் ரகசிய தொடர்பில் இருப்பதால் முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை எடுக்காமல் உள்துறை மவுனம் காப்பதுபோல் உள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. சந்திப்பின்போது, இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன், சுத்துக்கேணி பாஸ்கர் உடனிருந்தனர்.