உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு 

தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு 

 புதுச்சேரி: தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   இது குறித்து ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட பட்டியலின சாதி, பழங்குடியினர், நிலமற்ற வேளாண்மை தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள், உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 500 இடங்களில் உள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட  படிப்புகளை தொடர நிதி உதவி பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 135 புதிய கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் அதிகபட்சமாக 10 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும்.  2026–-27 தேர்வு ஆண்டிற்கான முதல் சுற்று விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இதற்கான இணையதளம் https://nosmsje.gov.inவரும் 02.06.2026 வரை திறந்திருக்கும். விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களில் தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ளும் பொருட்டு, இணையதளம் மீண்டும் 04.06.2026 முதல் 07.06.2026 வரை திறக்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மற்றும் திட்ட விவரங்களை அறிய, தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை இணையதளத்தை அணுகலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ