கோரிக்கைகளை வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் நல சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. மத்திய, மாநில அரசை கண்டித்து வெங்கடசுப்பா ரெட்டி சிலை அருகில் நேற்று மாலை 4:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் வல்லவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ், அன்பு நிலவன், செல்வம், சந்தோஷ், மது, ஆறுமுகம், பச்சையப்பன் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை ஆணைக்கு எதிராக நீக்கியதை கண்டித்தும், தன்னிச்சையாக நீக்கிய உத்தரவை வாபஸ் பெற்று மீண்டும் அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் நல சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா கோவில் அருகில் நிறைவடைந்தது.