மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இன்று பந்த்
புதுச்சேரி, : புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் இன்று 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை பாதிக்காது என கலெக்டர் அறிவித்துள்ளார்.புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதனை கண்டித்து, தொடர் போராட்டம் நடத்திய தி.மு.க., - காங்., உள்ளிட்ட இண்டியா கூட்டணி, இன்று 'பந்த்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.இதற்கு, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இண்டியா கூட்டணி கட்சியினர் நேற்று வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், தனியார் பஸ், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கத்தினரை சந்தித்து ஆதரவு கோரினர். பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.கலெக்டர் அறிவிப்பு: 'பந்த்' போராட்டத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும். மாணவர்கள் அச்சமின்றி பள்ளிக்கு வர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.