உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் டாக்சிக்கு அனுமதியில்லை மீறினால் வாகனம் பறிமுதல் போக்குவரத்து துறை எச்சரிக்கை

பைக் டாக்சிக்கு அனுமதியில்லை மீறினால் வாகனம் பறிமுதல் போக்குவரத்து துறை எச்சரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை. பொதுமக்கள் சொந்த வாகனத்தை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்து ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.புதுச்சேரியில் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பைக் டாக்ஸி என்கிற ரெபிட்டோ பைக் சர்வீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்டோ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில் புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'தனி நபர் போக்குவரத்திற்காக வாங்கப்பட்ட பைக்குகளை, வணிக நோக்கத்திற்காக மக்கள் போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்ய மொபைல் செயலி மூலம் புக் செய்து பயணிப்பது, இயக்குவது சட்டத்திற்கு புறம்பானது. பைக் டாக்சிக்கு இதுவரை முறையான அனுமதி பெறவில்லை.வணிக நோக்கத்திற்காக வாகனம் பயன்படுத்தும்போது அதற்கான வரி செலுத்தி பர்மீட் பெற வேண்டும். மஞ்சள் நிற நம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டும். இதனை மீறி தனது தனிப்பட்ட தேவைக்கு வாங்கிய பைக்கை வணிக நோக்கில் பயன்படுத்துவது ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.பைக் டாக்ஸி இயக்கும் நபரின் முன் அனுபவம், பின்புலம் தெரிவதில்லை. பைக்கிற்கு இன்சூரன்ஸ், பர்மீட் போன்ற ஆவணங்கள் இருக்கிறாதா, சாலை பாதுகாப்பு விதிகள் பின்பற்றுகிறாரா, ஹெல்மெட் அணிந்து செல்கிறாரா என்பதில் பெரும் சந்தேகம் உள்ளது. பெண்கள் பயணிக்கும்போது பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. இதுபோன்று விதிகளை மீறி பைக் டாக்ஸியாக பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்து ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.இதுபோல் வாடகை பைக் நிலையங்கள், பிளாட் பாரத்தை ஆக்கிரமித்து இருப்பதும், பர்மீட் இன்றி செயல்படுவதாக புகார் வந்துள்ளது. அனுமதி இன்றி இயங்கும் வாடகை பைக்குகளும் பறிமுதல் செய்யப்படும். ஏற்கனவே 20 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ