குடிபோதையில் அதிவேகமாக கார் ஒட்டி விபத்து ஏற்படுத்திய சென்னை நபர் கைது
புதுச்சேரி: காமராஜ் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தி சென்னை நபரை போக்குவரத்து போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, காமராஜ் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணிக்கு திருவள்ளுவர் சாலையில் இருந்து மோரிஸ் கேரேஜஸ் (எம்.ஜி) (டி.என்.14 ஏ.ஏ. 8356) கார் ஒன்று அதிகவேகமாக சென்றது. அந்த கார் உப்பனாறு பாலம் அருகே சாலையின் எதிரே வந்த 5 பைக்குகள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது. அதில், பைக் ஒன்று, காரின் சக்கரத்தில் சிக்கியதால், கார் நகர முடியாமல் நின்றது. அதைகண்ட அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு காரை சுற்றி வளைத்து, அதன் கண்ணாடிகளை அடித்து நொருக்கினர். பின், மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபரை காரில் இருந்து இறக்கி தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போக்குவரத்து போலீசார், போதையில் காரை ஓட்டி வந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுச்சேரி, 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்க வந்த, சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த மெடிக்கல் ரெப்பான ராஜப்பா மகன் தீபநாதன், 42; என்பதும், இவர் தனது இரண்டு நண்பர்களுடன் புதுச்சேரிக்கு வந்ததும் தெரியவந்தது. கருத்தரங்கு முடிந்ததும், நண்பர்களுடன் மது அருந்திய தீபநாதன், போதை தலைக்கேறிய நிலையில், தாங்கள் தாங்கியிருந்த விடுதிக்கு காரில் புறப்பட்டுள்ளார். தீபநாதன் அதிக போதையில் இருந்ததால், காரை அதிவேகமாக ஓட்டி எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்தில், புதுச்சேரி, நைனார்மண்டபம் சேரன் வீதியை சேர்ந்த சரவணகுமார், 30; ரெயின்போ நகர், 7 வது குறுக்கு தெருவை சேர்ந்த அருண், 35; அவரது மனைவி அருளரசி, 32; சுதானா நகர் விரிவை சேர்ந்த சுப்ரமணி, 36; ராஜா நகர், திருவள்ளுவர் சாலையை சேர்ந்த விநாயகம், 40; ஆனந்த ரங்கப்பிள்ளை நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த லெபின் கோபால், 35; அவருடைய மனைவி அனுசியா, 30; குழந்தை யோகிதா, 4; முனியப்பன், 52; ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், காரை பறிமுதல் செய்த கிழக்கு போக்குவரத்து போலீசார் தீபநாதனை கைது செய்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.