சி.வி.சண்முகம் எம்.பி., பதவி ராஜினாமா
–நமது நிருபர் –: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சண்முகம், மயிலம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அ.தி.மு.க., அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் சண்முகம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை டில்லி சென்ற சண்முகம், குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ராதாகிருஷ்ணனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒன்று, தமிழகத்தில் காலியாகியுள்ளது.