மதுபான பிராண்டுகளை புதுப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலக்கெடு
புதுச்சேரி: மதுபான பிராண்டுகளை புதுப்பிக்க வரும் 31ம் தேதி வரை காலக்கெடு விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.கலால் துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த கொள்முதலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை;புதுச்சேரியில் எப்.எல்.1., மொத்த மதுபான விற்பனையாளர்கள் உற்பத்தி செய்யும் மற்றும் வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மற்றும் பீர் பிராண்டுகளுக்கான விலையை அறிவிப்பதற்கான வழிமுறைகள்படி விலை அதிகரிப்பும், அறிவிக்கப்பட்ட விலையும் ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட வேண்டும்.கடந்த 2019ம் ஆண்டு கலால் வரி மற்றும் கூடுதல் சரக்கு வரி திருத்தப்பட்டாலும், பல பிராண்டுகள் அதிகபட்ச சில்லறை விலையை மட்டுமே திருத்தியுள்ளன. 2019ம் ஆண்டு முதல் கூடுதல் நடுநிலை மதுவின் விலை, பேக்கிங் பொருட்கள், பாட்டில்கள், சம்பளம் மற்றும் ஊதியம், போக்குவரத்து போன்ற உற்பத்தி செலவுக்கு பங்களிக்கும் பல காரணிகள் கணிசமாக அதிகரித்துள்ளன.உற்பத்தி, இறுக்குமதி செய்வோர் தங்கள் பொருட்களின் அறிவிக்கப்பட்ட விலையை உற்பத்தியில் அதிகரித்த விலையை இணைத்து திருத்தவில்லை. மொத்த விற்பனை மற்றும் லாப வரம்புகள் டீலர்களால் ஒரே சீராக இல்லாமல் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் அதிக எம்.ஆர்.பி., லாப வரம்பு உயர்கிறது.இதனால் கூடுதல் கலால் வரி குறைகிறது. எனவே 2025--26ம் ஆண்டிற்கான பிராண்டுகளை புதுப்பிப்பதற்கு முன், மொத்த விற்பனையாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பழைய விலையை மதிப்பாய்வு செய்து முறைப்படுத்தவுள்ளோம். பழைய விலை திருத்தி, புதிய விலை வழங்க உள்ளோம். அதிகரித்துள்ள அனைத்து உள்ளீடு செலவுகள், பிற மூலப்பொருட்களின் விலை, பாட்டில்கள், லேபிள்கள், பேக்கிங் பொருட்கள், மனிதவளம், தளவாடங்கள், முதலியன அறிவிக்கப்பட்ட விலையில் சேர்க்கப்படும்.வர்த்தக தள்ளுபடி, விற்பனை ஊக்குவிப்பு, சந்தைப்படுத்தல் செலவுகள் போன்ற மற்ற அனைத்து செலவுகளும் எம்.ஆர்.பி., விலைக்குள் கண்டிப்பாக சேர்க்கப்படும். உற்பத்தி, மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை விளிம்புகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 25 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. அனைத்து உற்பத்தியாளர்கள், எப்.எல்.1., உரிமம் பெற்றவர்கள் மேற்கண்ட திருத்தப்பட்ட விலையை வரும் 31ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த குறிப்பிட்ட மதுபான பிராண்டுகள் 2025-26ம் ஆண்டிற்கு புதுப்பித்தல் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.