ரசாயனம் பூசிய விநாயகர் சிலையை பயன்படுத்த கூடாது: ஆணையர் அறிவிப்பு
திருக்கனுார்: ரசாயனம் பூசிய விநாயகர் சிலையை சதுர்த்தி விழாவில் பயன்படுத்த கூடாது என ஆணையர் எழில்ராஜன் அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 42 கிராமங்களில் வரும் 7 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. இதையொட்டி, கொம்யூன் கிராம எல்லைகளில் விநாயகர் சிலைகள் செய்பவர்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து விழா நடத்துபவர்கள் கொம்யூன் பஞ்சாயத்தில் அனுமதி பெற வேண்டும்.பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் தற்காலிகமாக சிலை அமைத்து வழிபடவேண்டும். விழா முடிந்ததும் சிலை அப்புறப்படுத்த வேண்டும்.ஒலி பெருக்கிகள் அமைத்தால் போலீசில் முன் அனுமதி பெற்றவேண்டும். களிமண்ணால் ஆன சிலையினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயனம் பூசிய விநாயகர் சிலையை பயன்படுத்த கூடாது. எனவே, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுசூழல் துறை வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.