அரபிந்தோ அரங்கில் இன்று திரவுபதி நாடகம்
புதுச்சேரி: ஆரோவில் பாரத்நிவாஸ் அரபிந்தோ அரங்கில் இன்று திரவுபதி நாடகம் நடக்கிறது.கோமல் தியேட்டரின் பிரம்மாண்ட மேடைப்படைப்பு திரவுபதி நாடகம், கடந்தாண்டு சென்னையில் அரங்கேறியதை தொடர்ந்து, இந்தியாவில் பல நகரங்களிலும், துபாய், மஸ்கட் போன்ற வெளி நாடுகளிலும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டுள்ளது.இந்த திரவுபதி நாடகம் தற்போது ஆரோவில் பாரத்நிவாசில் உள்ள அரபிந்தோ அரங்கத்தில்இன்றுமாலை 6:30 மணிக்கு நடக்கிறது.இந்த நாடகக் கதையை தாரிணி கோமல் எழுதி இயக்கியுள்ளார்.அவர் கூறியதாவது, 'திரவுபதி பெண்மை சக்தியின் ஒரு அடையாள நாயகி. மகாபாரதத்தின் சக்தி வாய்ந்த கதாபாத்திரம். பாஞ்சால தேசத்தின் மகள் பாஞ்சாலி எனும் திரவுபதி சூழ்நிலைகளால் வஞ்சிக்கப்பட்டவள்.துயரப்படும் பெண்களின் பிரதிநிதி. பிறர் நலம் காக்க தன் சுயத்தை பலியிட்ட ஒரு இந்திய மரபுப் பெண். ஆட்சி உரிமை, அதிகார போட்டி, ஆண்களின் அகங்காரம் இவற்றுக்கிடையில் பகடையான ஒரு இதிகாச நாயகியின் போராட்டக் கதை தான் திரவுபதி. பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக அறியப்பட்ட திரவுபதிக்கு கோவில் கட்டி இன்றும் வழிபாடு செய்வதின் பின்னணியைச் சொல்வது தான் இந்த நாடகம்.முதல் பாதி வசனங்கள் கவிஞர் சதீஷ் குமாரும். பின்பாதி பாரதியின் பாஞ்சாலி சபதம் கவித்துமான வரிகளும் இடம் பெறுகின்றது. இந்த நாடகத்துக்காக எட்டயபுரத்து மகாகவியின் வாரிசு ராஜ் குமார் பாரதி இசையமைத்து இருக்கிறார். பார்க்க விரும்புவர்கள் தங்களது நுழைவுச்சீட்டை புக் மை ேஷா ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரங்கத்திலும் கிடைக்கும்' என்றார்.