அரசு பள்ளி மாணவர்களுக்கு மனித வள பயிற்சி முகாம்
புதுச்சேரி: வில்லியனுார், சுல்தான்பேட்டை, கண்ணியமிகு காயிலே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மனித வள மேம்பாட்டு மற்றும் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. பள்ளி துணை முதல்வர் மோகன் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை உமா வரவேற்றார். மாநில இலவச சட்ட உதவிகள் ஆணைய செயலர் நீதிபதி ரமேஷ் பயிற்சி முகாமைத் துவக்கி வைத்து, மாணவப் பருவத்தில் ஏற்படும் பதின் பருவ மாற்றங்கள், வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்பண்புகள், குற்றமில்லா புதுச்சேரியை உருவாக்குவதில் மாணவர்களின் கடமைகள் மற்றும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தலைமைப் பண்புகள் குறித்துப் பேசினார். புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரக்குமரன், மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெறுவது குறித்துப் பேசினார். புதுச்சேரி அரசின் சிறுவர் நலக்குழு முன்னாள் உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, கல்வி, அறிவு, ஒழுக்கம், சுயக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், உயர் கல்வியின் அவசியம் மற்றும் ஆளுமைத் திறன்கள் குறித்துப் பேசினார். சிறார் நீதிக்குழுமத்தின் சட்ட நன்னடத்தை அதிகாரி ஜெகதீஷ் சிறுவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்துப் பேசினார். ஆசிரியை சத்தியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ், பட்டதாரி ஆசிரியை தேவி பாலா ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.