ஒருங்கிணைந்த பயிர் உற்பத்தி இரண்டு நாள் பயிற்சி முகாம்
பாகூர்: காய்கறி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் உற்பத்தி என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம், பாகூர் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. புதுச்சேரி வேளாண் துறை, பாகூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், பாகூர் மற்றும் சேலியமேடு உழவர் உதவியகத்திற்கு உட்பட்ட காய்கறி பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு ‘காய்கறி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் உற்பத்தி’ என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம், பாகூர் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. முகாமில், பாகூர் உழவர் உதவியக வேளாண் அலுவலர் பரமநாதன் வரவேற்று பேசுகையில், ‘காய்கறி மற்றும் கீரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து இயற்கை வழி உரங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார். பாகூர் கோட்ட துணை வேளாண் இயக்குநர் குமாரவேலு தலைமை தாங்கி இயற்கை விவசாயத்திற்கு உள்ள பல்வேறு அரசு மானியங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். வேதியியல் பிரிவு வேளாண் அலுவலர் புவனேஸ்வரி ‘வயல்களை காக்கும் இயக்கம்’ குறித்தும், தோட்டக்கலை பிரிவு வேளாண் அலுவலர் சிவக்குமார் ‘தோட்டக்கலை விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் பல்வேறு மத்திய மாநில திட்டங்கள்’ என்ற தலைப்பிலும், பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலைய வேளாண் வல்லுனர் சுதாகர்ராவ் ‘காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம்’ என்ற தலைப்பிலும் பயிற்சி அளித்தனர். முகாமின் ஒரு பகுதியாக, பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு நேரடியா கள பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் முத்துகுமரன், ஆத்மா மேளாலர் ஆறுமுகம், செயல் விளக்க உதவியாளர்கள் குணசீலன், கதிர்வேல் செய்திருந்தனர்.